”ஜூன் மாசத்துல பாதி முடிஞ்சிருச்சு. ஆனாலும் கொதிக்குது” என்று புலம்பிக் கொண்டே அலுவலகத்துக்குள் வந்தாள் ரகசியா.
“பாலிடிக்ஸ்லயும் போகல போல. அதிமுக கொதிச்சுக்கிட்டு இருக்கே” என்றோம்.
”ஆமாம். ஓபிஎஸ்தான் ஏக டென்ஷன்ல இருக்கார். எத்தனை நாள்தான் இவங்களைப் பொறுத்துக்கிட்டே இருக்கிறது. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தேன், எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக் கொடுத்தேன். இப்ப ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பிடுங்க நினைக்கிறாங்க என்று ஆதரவாளர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு”
“ஆனா இந்த தடவை வழக்கத்துக்கு மாறா ப்ரஸ் மீட் வச்சு செய்தியாளர்கள்கிட்ட விளக்கமா பேசியிருக்கிறாரே?”
“சாது மிரண்டால் என்பது போன்ற நிலையில்தான் ஓபிஎஸ் இருக்கிறார். இப்பவும் இப்படி இருந்தா ஜனங்க உங்களை மறந்திருவாங்க. தொண்டர்களும் மறந்துருவாங்கனு அவரோட ஆதரவாளர்கள் சொல்லியிருக்காங்க”
“ஏன் திடீர்னு இந்தப் பிரச்சினை? நல்லாதானே போய்கிட்டு இருந்தது?”
“ஓபிஎஸ் மூலமா சசிகலா உள்ள வந்துருவாங்களோனு எடப்பாடி பயப்படுறார். அவங்க உள்ள வந்துட்டா தன்னோட கண்ட்ரோல் போயிடும்னு பார்க்கிறார். அதுக்காக ஜெயக்குமாரைவிட்டு ஆழம் பார்க்கிறார். ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்னு அவர் செய்தியாளர்கள்கிட்ட பேசினதுதான் ஒபிஎஸ்க்கு அதிர்ச்சி”
“ஜெயக்குமாருக்கு ஏன் ஓபிஎஸ் மீது கோபம்?”
“இந்தக் கோபம் இப்ப வந்ததில்லை. கடந்த அக்டோபர் மாதம் ஓபிஎஸ் கூறியதை நினைவுப்படுத்தி பாருங்க. சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு ‘தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது அது பெரிய சர்ச்சையாச்சு. செல்லூர் ராஜூ, ஜேசிடி பிரபாகர் போன்றவர்கள் ஓபிஎஸ் கருத்தை ஆதரித்தார்கள். ஆனால் ஜெயக்குமார் அதை ஏற்கவில்லை, அதிமுகவில் சசிகலா இல்லை என்று முடிவு செய்யப்பட்டப் பிறகு கலந்துப் பேசி முடிவெடுப்பார்கள் என்று சொன்னது சரியல்ல என்றார். அப்போதே இந்தப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சமீபத்திய ராஜ்ய சபை தேர்தலில் ஜெயக்குமார் போட்டியிட விரும்பினார். அவரை எதிர்த்தது ஓபிஎஸ். இந்தக் கடுப்பும் ஜெயக்குமாருக்கு இருக்கிறது. அதெல்லாம் சேர்ந்துதான் இப்போதைய பிரச்சினைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது” என்று சொல்லி சில்லென்ற லெமன் சால்ட் சோடாவை குடித்துக் கொண்டாள் ரகசியா.
“இப்ப என்ன நடக்கப் போகுது?”
“தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள் என்று அக்டோபரில் ஓபிஎஸ் சொன்னார் அல்லவா? இந்தப் பொதுக்குழுவில் சசிகலா விஷயத்தை கொண்டு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தின் அடிப்படையில்தான் ஒற்றைத் தலைமை என்ற குரலை எழுப்பியிருக்கிறார்கள்”
“ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்?”
“இந்த முறை அடங்கிப் போகமாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். எதிர்த்து நிற்பார் என்கிறார்கள். அவர் எதிர்த்தாலும் கவலையில்லை என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். பொதுக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது பன்னீர்செல்வம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் ஆனால் அவர் நினைப்பது நடக்காது என்கிறது எடப்பாடி தரப்பு. சேலத்தில் தம்பிதுரை மற்றும் முனுசாமி ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அதே நேரம் ஓபிஎஸ் தலைமைக் கழகம் வந்தார்.கட்சி நிர்வாகி ஒருவரிடம், பொதுக்குழு தீர்மானம் எல்லாம் ரெடியா அதை எடுத்து வாருங்கள் என்று சொன்னதும் தீர்மானங்களை கவனித்து வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், வைகைச்செல்வன் ரெண்டு பேரும் தீர்மான நகலுடன் வந்திருக்காங்க. பொன்னையன் தீர்மானம் பற்றி ஏதோ சொல்ல வர ஓபிஎஸ் வைகை செல்வனைப் பார்த்து, நீங்க சொல்லுங்கனு சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ் உடனே டென்ஷனான பொன்னையன் அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டாராம்.”
“இப்படிலாம் நடந்தாதான் அதிமுகன்ற கட்சி இருக்குங்கிறதே வெளில தெரியுது”
“ஆமா, அந்த விதத்துல தொண்டர்களுக்கு சந்தோஷம்தான். நம்ம தலைவர்கள் பேரும் பேப்பர்ல வருதுனு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காங்க” என்று சிரித்தாள் ரகசியா.
“சரி, பாஜக இந்த விஷயத்துல மூக்கை நுழைக்கலையா?”
“இல்லாம இருக்குமா. மைத்ரேயன் மூலமா மூவ் பண்றாங்க. இல.கணேசன் மைத்ரேயனை சந்தித்து பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் முடியற வரைக்கும் அதிமுகவுல் எந்தப் பிரச்சினையும் வராம பாத்துக்கணும்னு அமித் ஷா சொன்னாராம்”
“சசிகலா என்ன செய்யப் போறாங்க?”
“சசிகலாவுக்கு இப்ப இருக்கிற பெரிய பிரச்சினை பணம். அவரோட பணம் நிறைய இடத்துல லாக் ஆகி இருக்கு. அதனால பெரிய அளவுல எதையும் செய்ய முடியாம இருக்கிறார். தினகரன் மேலயும் வருத்தம் இருக்கிறதுனால நடக்கிறதையெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கார். இந்த சண்டைனால கட்சி தன் பக்கம் வரும்கிற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறதா அவரது ஆதரவாளர்க சொல்றாங்க”
“அதிமுகவுல சசிகலாவை சேர்த்துப்பாங்களா?”
“ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த நிலைப்பாட்டுலதான் இருக்காங்க. சாதி ரீதியாகவும் அதிமுகவினர் ஒற்றைத் தலைமை சிக்கலைப் பார்க்கிறாங்க”
“கடைசியா அதிமுக பத்தி ஒரே ஒரு கேள்வி. பொதுக் குழு நடக்குமா? நடக்காதா? நடக்காது தள்ளி வைக்கப்படும்னு சொல்றாங்களே?”
”நிச்சயம் நடக்கும். அது ஒண்ணா நடக்குமா? தனித் தனியா ரெண்டா நடக்குமானு தெரியல”
“என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடுற”
”ஆமா, நிலைமை அப்படிதான் போய்க்கிட்டு இருக்கு. அதிமுக பத்தி பேசிக்கிட்டு இருக்கிறது போரடிக்குது. கவர்னர் மாளிகைலருந்து சில தகவல்கள் கசிஞ்சிருக்கு. அதையும் கேளுங்க”
“என்ன தகவல்? மீண்டும் மாநில அரசோடு மோதலா?”
“தன்னோட இருப்பிடத்தை கிண்டிலருந்து ஊட்டிக்கு மாத்திடலாமானு யோசிக்கிறாராம்”
“என்னாச்சு?”
“கிண்டில உள்ள ராஜ்பவன் ஏரியாவை தமிழ்நாடு அரசு எடுத்துக்கிட்டு கவர்னர் மாளிகைக்கு சின்னதா இடம் கொடுக்கலாம்னு ஒரு நியூஸ் போய்க்கிட்டு இருக்கு. அவங்க அப்படி பண்றதுக்கு முன்னால தானே முன் வந்து இவ்வளவு பெரிய இடம் எனக்கு வேணாம், நீங்க எடுத்துக்குங்க நான் ஊட்டிக்கு போயிடுறேன்னு தானே சொல்லிடலாம்னு பார்க்கிறாராம்”
“அங்கிருந்து கவர்னர் வேலையைப் பார்க்க முடியுமா?”
”ஏன் முடியாது? வொர்க் ஃபரம் ஹோம் மாதிரி வச்சுக்குங்களேன். கவர்னர் மாளிகை மாதிரி குடியரசுத் தலைவர் மாளிகையும் மாறப் போகுதுனும் ஒரு செய்தி இருக்கிறது”
“குடியரசுத் தலைவர் மாளிகை டெல்லில இருக்கு. அது மாறப் போகிறதா? ஏன்?”
“குடியரசுத் தலைவர் இந்தியாவின் வட பகுதிலேயே இருக்கிறார். தென் பகுதிலேயும் சில மாதங்கள் இருந்தா நல்லாருக்கும் மத்திய அரசு நினைக்குது. அதனால ஹைதராபாத்ல இல்லாட்டி சென்னைல ஆறு மாசம குடியரசுத் தலைவர் தங்கியிருப்பார்”
“சென்னைலயா?”
“ஆமாம். கிண்டி ராஜ்பவன்ல. குடியரசுத் தலைவர் இருக்கப் போறார்னா ராஜ்பவன் ஏரியாவை சுருக்க முடியாதுல. அப்படியேதானே வச்சிருக்கணும். எப்படியிருக்கு இந்த யோசனை”
“இதெல்லாம் நடக்குமா?”
“எதுதான் நடக்காது? அரசியல்ல எல்லாமே பாசிபிள்தான்”
“திமுக தரப்பு செய்திகள் எதுவும் இல்லையா?”
“இருக்கு. தருமபுரம் ஆதீன விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள இருக்கிறார். ஆதீனத்துக்கு சொந்தமான கல்லூரிக்கு ஆகஸ்டில் பவளவிழா நடக்கிறது அந்த விழாவில் முதல்வர் கலந்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார். முன்பு கலைஞர் முதல்வராக இருந்தபோது இந்த ஆதீன நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டிருக்கிறாராம்” என்று சொல்லி கிளம்பினார் ரகசியா.