இதுவரை இந்தியாவில் நடந்த 15 குடியரசுத் தலைவர் தேர்தல்களில் இருமுறைதான் போட்டியின்றி குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1950ல் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திரப் பிரசாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாம் முறை 1977ல் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 36 வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் 16வது குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை தேடுவதில் கட்சிகள் பரபரப்பாய் இருக்கின்றன.
மத்தியில் ஆளும் கூட்டணியாக பாஜக இருந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க அதற்கு மற்ற கட்சிகளின் உதவியும் தேவைப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில எம்.எல்.ஏ.க்கள் (மொத்தம் 4033 பேர்), நாடாளுமன்ற எம்.பிக்கள் (776 பேர்) அனைவரும் வாக்களிப்பார்கள். இவர்களின் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு மதிப்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மொத்த வாக்குகள் 10,86,431. இந்த வாக்குகளில் 5,43,216 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெற முடியும்.
2017ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளாராக ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார். எதிரணியின் சார்பாக மீரா குமார் போட்டியிட்டார். 7,02,000 வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். எதிரணியின் மீரா குமார் பெற்றது 3,67,000 வாக்குகள்.
இன்றைய சூழலில் பாஜக கூட்டணிக்கு பதிமூன்றாயிரம் வாக்குகள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அந்த வாக்குளை மிக எளிதாக மற்றக் கட்சிகள் மூலம் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளது.
ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம். பிஜு ஜனதா தளத்திடம் 31 ஆயிரம் வாக்குகள் உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 43 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆதரித்தால்கூட பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றுவிடுவார். இதுதான் குடியரசுத் தேர்தலில் இன்றைய நிலை.
ஆனாலும் எதிர்க் கட்சிகள் இந்தத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டிவிட வேண்டுமென்று முனைப்பாக இருக்கின்றன. பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டிவிட்டால் பாஜகவுக்கு சவாலாக மாற முடியும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்காக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றன.
நேற்று மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன.
தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
கூட்டத்துக்கு பிறகு செய்தி யாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க அவர் மீண்டும் மறுத்துவிட்டார். என்றாலும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். இது ஒரு நல்ல தொடக்கமாகும். பல மாதங்களுக்கு பிறகு நாங்கள் ஒன்றாக கூடியுள்ளோம். இதுபோன்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை மீண்டும் நடத்துவோம்’’ என்றார்.
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறும்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும்படி சரத் பவாரிடம் அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டன. ஆனால், அவர் மறுத்துவிட்டார்” என்றார்.
எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஃபருக் அப்துல்லாவையும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியையும் மமதா பானர்ஜி பரிந்துரை செய்திருக்கிறார்.
மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. கோட்சே கொண்டாடத் துவங்கியிருக்கும் காலக்கட்டத்தில் காந்தியின் பேரனைக் களத்தில் இறக்குவது சரியாக இருக்கும் என்று எதிர்க் கட்சிகள் நினைக்கின்றன.
அது போல் மூத்த தலைவரான ஃபரூக் அப்துல்லா இஸ்லாமியர். இன்று மத வெறுப்புணர்வு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமியரை குடியரசுத் தலைவராக்குவது பலனளிக்கும் என்றும் கருதுகின்றன. இஸ்லாமியரை நிறுத்துவது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியரின் வாக்குகளைப் பெற உதவும் என்ற கணக்கும் இருக்கிறது.
இந்த இருவர்தான் இதுவரை எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாக தெரியப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் மாற்றம் வரலாம்.
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளாராக முன்னிறுத்தினால் திமுக அவரை ஆதரிக்கும் என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே திமுகவின் தலைமையை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாஜக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பது திமுகவுக்கு தேர்தல் அரசியலில் பலவீனமாகிவிடும் என்று திமுக தலைமை கருதுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை எதிர்க் கட்சிகளின் நோக்கம் வெற்றி பெறுவது அல்ல, ஒற்றுமையாக வெற்றிக்கு முயற்சிப்பது.
எதிர்க் கட்சிகளின் இலக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல். இப்போது எதிர்க்கட்சிகளுக்கிடையே நல்ல புரிதல் ஏற்பட்டால் அது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க உதவும் என்பது அவர்கள் திட்டம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் சோதனை ஓட்டம்தான்.
நிஜ பலப்பரீட்சை 2024ல்தான்.