No menu items!

84 கோல்கள் – சேட்ரியை கொண்டாட மறந்த இந்தியா!

84 கோல்கள் – சேட்ரியை கொண்டாட மறந்த இந்தியா!

இந்தியாவுக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையே கடந்த செவ்வாய்கிழமை நடந்த ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று கால்பந்தில் 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. இதன்மூலம் ஆசிய கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆனால் விஷயம் அதுவல்ல…

இந்த போட்டியில் சர்வதேச கால்பந்து போட்டியில் தனது 84-வது கோலை அடித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேட்ரி. இதன்மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

117 கோல்களை அடித்து இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 86 கோல்களை அடித்து 2-வது இடத்தில் இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி. இதில் மெஸ்ஸியைவிட வெறும் 2 கோல்கள் மட்டுமே குறைவாக அடித்துள்ளார் சேட்ரி. இதில் முதல் இருவரும் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டுக்கொண்டு இருக்க, இந்தியாவில் பிறந்ததாலோ என்னவோ சேட்ரியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சச்சினையும், தோனியையும், விராட் கோலியையும் பற்றி ‘டாப் டூ பாட்டம்’ தெரிந்து வைத்திருக்கும் இந்தியர்களுக்கு சேட்ரியைப் பற்றி பல விஷயங்கள் தெரியாது. அவ்வளவு ஏன்.. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதுகூட தெரியாது.

1984-ம் ஆண்டில் ஆந்திராவில் பிறந்த சுனில் சேட்ரி சிறுவயதில் வளர்ந்தது காங்டாக் நகரில். அவரது பெற்றோர் இருவரும் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். சேட்ரியின் அம்மா சுசீலா சேட்ரி, நேபள நாட்டுக்காக பெண்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியவர். அதனாலேயே தனது மகனையும் கால்பந்து வீரனாக்க வேண்டும் என்று பயிற்சி அளித்துள்ளார்.

கேங்காடக்கில் உள்ள பள்ளியில் ஆரம்பத்தில் படித்த சேட்ரி, அதன்பிறகு பெற்றோருக்கு இடமாற்றம் கிடைத்ததால் டெல்லியில் செட்டில் ஆகியுள்ளார். அங்குள்ள ராணிவப் பள்ளியில் படித்த காலத்திலேயே கால்பந்து போட்டிகளில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் இவர் சிறப்பாக ஆட அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி உள்ளார்.

2001-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான ஆசிய போட்டியில் இவரது கால்கள் செய்த வித்தை பலரையும் கவர பல கிளப்களிலும் இருந்து அழைப்பு வந்துள்ளது அதனால் பிளஸ் 2 வகுப்புடன் படிப்புக்கு குட்பை சொன்ன சேட்ரி, கால்பந்தில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார்.

2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டிதான் சேட்ரி பங்கேற்ற முதல் போட்டி. தனது அறிமுக போட்டியிலேயே கோல் அடித்து அசத்திய சேட்ரி, அன்றுமுதல் கால்பந்தில் இந்தியாவின் சச்சினாக இருந்துள்ளார். தனிப்பட்ட அளவில் இவர் பல சாதனைகளை படைத்தாலும் இந்திய கால்பந்து அணி போட்டிகளில் ஜெயிக்காததால், இவரைப் பலரும் கவனிக்கவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள வீரர்களின் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள சேட்ரி வெறும் 7 கோடி ரூபாயை மட்டுமே சம்பாதித்துள்ளார். அதுவும் கிளப் கால்பந்து போட்டிகளில் ஆடியதால்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் சேட்ரி பெரிதாக கவலைப்படவில்லை. ”நான் சாதனைகளைப் பற்றியோ புகழைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. மைதானத்தில் எஞ்சாய் செய்து ஆடவேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோள்” என்கிறார்.

சேட்ரி வேண்டுமானால் புகழைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் அவரைப் போன்றவர்களை கொண்டாடாததை நினைத்து நாம் நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...