சமூக ஊடகங்கள் கொண்டாடும் சாய் பல்லவி – ’லேடி பவர் ஸ்டார்’ கதை
சமூக ஊடகங்களில் இப்போதைய ஹாட் டாபிக் சாய் பல்லவிதான்.
காரணம் சமீபத்தில் தெலுங்கு சேனலுக்கு அவர் கொடுத்த ஒரு பேட்டி. அந்தப் பேட்டியில், ’’சில நாட்களுக்கு முன்பு ‘காஷ்மீரி ஃபைல்ஸ்’ படம் வெளியானது. அந்த படத்தில் காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்படுவதைக் காட்டியிருப்பார்கள். இந்த கோவிட் சமயத்தில் ஒரு முஸ்லீம் தன்னுடைய வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்றதை சில மக்கள் தடுத்து நிறுத்தி அடிப்பதைப் பார்த்தோம். அவரை ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரிக்க சொன்னார்கள். அப்போது நடந்தததற்கும் என்ன. இப்போது நடந்ததற்கும் பெரிய வித்தியாசமில்லை. எங்கு இருந்தாலும் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்.’ என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக சென்றுக் கொண்டிருந்தது. ரவுடி பேபியாக வலம் வரும் சாய் பல்லவிக்கு இப்படியொரு முகமா என்று ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
இப்போது தெலுங்குப் பட உலகில் சாய் பல்லவியை லேடி பவர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். இந்தக் கொண்டாட்டங்களுக்கு முன்னால் சாய் பல்லவி வளர்ந்தது கடினமான பாதையில்.
‘பாடி ஷாமிங்’கை வைத்து கிண்டலடிக்கப்பட்டு வந்த சாய் பல்லவியைப் போல் கிண்டல், கேலி என பொதுவெளியில் அதிகம் காயப்பட்டிருக்கும் நடிகை வேறு யாரும் இன்று இருக்கமுடியாது.
அவர் மீது தொடுக்கப்பட்ட வார்த்தை காயங்கள் அனைத்திற்கும் அவர் அளித்த ஒரே பதில் புன்னகை மட்டுமே. அதிகம் உணர்ச்சிவசப்பட்டது கூட கிடையாது. இதுவும் அவர் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. மறுபக்கம் தனது உயிர்புள்ள நடனம், பாடல்களில் ஒவ்வொரு நடன அசைவையும் ரசித்து ஆடும் ஆர்வம், வெளிப்படையாக பேசும் குணம் இவற்றுக்காகவும் சாய் பல்லவி பின்னால் மாபெரும் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
இதன் வெளிப்பாடே கடந்த பிப்ரவரி 27-ம் தேதியன்று நடந்த அந்த சம்பவம். ‘ஆடவாலு மீக்கு ஜோஹர்லு’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது அப்படக்குழு. இவ்விழாவில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார், கீர்த்தி சுரேஷ் உட்பட தெலுங்கு சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த முக்கிய விருந்தினர்களில் சாய் பல்லவியும் ஒருவர்.
சமீபத்தில் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா’ படத்தின் இயக்குநர் சுகுமார் இவ்விழாவில் பேச ஆரம்பித்தார். அப்போது மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் பெயர்களை சொல்லிக் கொண்டே வர, அவர் ‘சாய் பல்லவி’ என்று சொன்னதும் அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. கைத்தட்டல்கள் அடங்க நேரமாகியது. விசில்கள் தொடர்ந்து பறந்தன. இயக்குநர் சுகுமாரால் அடுத்த சில நிமிடங்களுக்கு பேசவே முடியவில்லை. அந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் சாய் பல்லவிக்கு மாஸ் காட்டியது.
மெகா ஹிட் படமான ’புஷ்பா’வில் இயக்குநர் சுகுமார் வைத்த ‘ஃப்ளவர் இல்லடா ஃபயர்’ என்ற வசனத்தை அப்படியே சாய் பல்லவின்னா ஃப்ளவர் இல்லாடா ஃபயர் என்று உல்டா செய்து காட்டியது போல் இருந்தது அங்கு நடந்த சம்பவம்.
ஒரு வழியாக பேச்சைத் தொடர்ந்த சுகுமார், ‘இந்தளவிற்கு ரசிகர்களிடையே மாஸ் இருப்பது நம்முடைய பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு மட்டும்தான். அடுத்து அதே மாஸ் இங்கே இருக்கிற சாய் பல்லவிக்கு இருக்கிறது. சாய் பல்லவி, ’லேடி பவர் ஸ்டார் ’என்றார். இங்குதான் ‘லேடி பவர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கான விதைப் போடப்பட்டது.
பிப்ரவரி 27 அன்று, லேடி பவர் ஸ்டார் ஆக பாராட்டப்பட்ட சாய் பல்லவிக்கு, அப்பட்டத்தை திரையிலேயே கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது ‘விராட்டா பர்வம்’ படக்குழு. ரானா டக்குபதியுடன், சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ’விராட்டா பர்வம்’ படத்தின் வெளியீட்டு முந்தைய விழாவில், திரையிட்ட காணொலியில் ‘லேடி பவர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் சாய் பல்லவி பெயரை திரையிட்டு இருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ரானா டக்குபதியும் கூட எந்தவித ஈகோவும் காட்டாமல், சாய் பல்லவிக்கான பட்டாபிஷேகத்தை மேடையில் கொண்டாடியிருக்கிறார்.
பட்டாபிஷேகம் நடந்த கையோடு, படத்தின் ப்ரமோஷனுக்காக கொடுத்த ஒரு பேட்டியில் வழக்கம் போல் தனது மனதில் பட்டத்தை பளீச் என்று சொல்லியிருக்கிறார் ‘லேடி பவர் ஸ்டார்’. இப்போது இந்த சமாச்சாரம்தான் தெலுங்கு சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
‘’நம்முடைய ஐடியாலஜியை மற்றவர்களுக்கு சொல்வதற்கு வன்முறை என்பது தவறான ஒன்று. எந்தவொரு பிரச்சினையையும் வன்முறையால் தீர்க்க முடியுமென நான் நம்பவில்லை.’’ என பஞ்ச் வைத்திருக்கிறார் ’லேடி பவர் ஸ்டார்.’
உண்மைதான்.