நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார். இந்த கூட்டத்தின்போது தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கினார்.
மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது – பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், “காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்” என்று முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக ஆளுநர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி அங்கு தங்கிவிட்டு நாளை காலை பீகார் மாநிலம் பாட்னா செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் டெல்லி செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து புதன்கிழமை சென்னை திரும்புகிறார். கவர்னர் டெல்லியில் யார்-யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரம் எதுவும் வெளியிடப்பட வில்லை.
இலங்கை மின்சார சபை தலைவர் திடீர் ராஜினாமா
இலங்கை மன்னார் காற்றலை மின்சார திட்டத்தை அதானியின் நிறுவனத்திற்கு வழங்க தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்துள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தின. இதன்பின்னர் சில மணி நேரங்களில், தாம் கோப் குழுவில், ஜனாதிபதி கோத்தபய பற்றி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்றும் உணர்ச்சிவசப்பட்டு, அவ்வாறு கூறியதாகவும் பெர்டினாண்டோ குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரையில் இருந்தாலும் தலைவர்தான் – கமல்ஹாசன் கருத்து
மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நடந்த ரத்த தான முகாமை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் அரசியலில் இருந்து மீண்டும் நடிக்க சென்றுவிட்டதாக கூறுகின்றனர். சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான்.
அரசியல் என்பது ஓட்டு எண்ணிக்கையோ, கமிஷன் வாங்குவதோ, எவ்வளவு பணக்காரன் ஆவதோ கிடையாது. ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல். உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரனாக இருப்பது போதாது. தெருவே சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். அரசியலில் நாங்கள் எங்கள் பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். இந்த அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். தடால், தடால் என பேசுவதை சினிமாவில் பேசுகிறேன். எனக்கு தொழில்நுட்பம் இருக்கிறது, அவர்களிடம் வெறும் மேடை தான் இருக்கிறது. நான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. சினிமாவில் நடித்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்பதால் நடிக்கிறேன்” என்றார்.