தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
மதம் சார்ந்த விஷயங்களில் தலையிடுவதை அரசு தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஆதீனங்கள் விவகாரத்தில் தேவையற்ற தலையீட்டை அரசு தவிர்க்க வேண்டும். மதம், கோயில் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்’’ என்று கூறினார்.
10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 34 மாணவர்கள் தற்கொலை: ஆந்திராவில் சோகம்
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 6 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். கடந்த 3-ந் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2 லட்சம் மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளில் 34 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜாகீர் உசைன் மீதான பாலியர் புகார்: நீதிமன்றத்தை நாட உள்ளதாக இசைப்பள்ளி ஆசிரியை சுஜாதா பேட்டி
பிரபல பரதநாட்டியக் கலைஞரும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை இசைப் பள்ளி கலையியல் அறிவுரைஞருமான ஜாகிர் உசேன் மீது, கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளி ஆசிரியை சுஜாதா, தன்னிடம் அத்துமீறியதாக பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விசாகா கமிட்டி, ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார்கள் அனைத்தும் புனையப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இசைப்பள்ளி ஆசிரியை சுஜாதா, “கரூர் அரசு இசைப் பள்ளியில் நடந்த பாலியல் புகார் சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. ஜாகிர் உசேன் மீது நான் பொய் புகார் அளிக்கவில்லை. விரைவில் இவ்விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
பாஜக எதிர்ப்பை மீறி தன்னைத் தானே மணந்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்து
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து, “திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், என்னை நானே திருமணம் செய்துகொள்ள போகிறேன்” என்று கூறி இருந்தார். இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் பாஜகவினர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று, இந்து திருமண சடங்குகள்படி ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் பிந்துவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.