ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு உலகம் அஞ்சியது. மக்கள் தொகை இத்தனை வேகமாய் அதிகரிக்கிறதே.. இத்தனை பேருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சாத்தியமில்லை, மக்கள் தொகை பெருக்கத்தால் உலகத்தில் ஏழ்மை அதிகரிக்கும், இருப்பிடம், உணவுக்காக போர்கள் நடக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.
தற்போது உலகின் மக்கள் தொகை 800 கோடி அதாவது 8 பில்லியனாக இருக்கிறது. இந்த மக்கள் தொகை 2054ல் 8.9 பில்லியனாக உச்சத்தைத் தொட்டு இறங்கத் தொடங்கும். அதன்பின் 2100-ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 7.2 பில்லியனாக இருக்கும் என்று ஐ.நா.சபையின் மக்கள் தொகை ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள மக்கள் தொகையிலிருந்து 80 கோடி மக்கள் குறைந்து விடுவார்கள்.
மக்கள் தொகை குறைவது நல்லதுதானே, மக்கள் தொகை அதிகமாய் இருப்பதால்தானே பிரச்சினைகள் என்று இத்தனை காலம் கூறிக் கொண்டிருந்தோம், மக்கள் தொகை குறைவது நல்லதுதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால் மக்கள் தொகை குறைவதிலும் சிக்கல் இருக்கிறது.
உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இப்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உலகின் இளமை ததும்பும் தேசங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக 20-லிருந்து 44 வயதுக்குட்பட்டவர்களின் சராசரி சதவீதம் 8.5-ஆக இருக்கிறது. 50 வயதுக்குட்பட்டவர்களின் சதவீதம் 4-க்குள் இருக்கிறது. இந்த சதவீதங்கள் 2050-ல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் சதவீதம் 6 சதவீதமாக அதிகரிக்கிறது. 2100-ல் சுமார் 7 சதவீதமாக அதிகரிக்கும். அதே வேளையில் இளைஞர்களின் எண்ணிக்கை சதவீதம் குறைந்து சுமார் 4 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றைய நிலையிலிருந்து பாதியாக மாறுகிறது. இந்தியா வயதானவர்களின் நாடாக உருவெடுக்கிறது.
வயதானவர்களை கவனிக்க இளைஞர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்க மாட்டார்கள். உழைக்கும் வயதிலிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்த நாட்டுக்கு அது பலவீனம்.
இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் பலவும் இந்தப் பிரச்சினையில் சிக்கப் போகின்றன.
தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், போஸ்னியா, ப்யூர்டோ ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் கருத்தரிப்பு தற்போது மிக அதிகமாக குறைந்திருக்கிறது. 2020 -2025 காலகட்டத்தில் இந்நாடுகளின் கருத்தரிப்பு சதவீதம் ஒன்றுக்கும் கீழ் குறைந்துவிடும், மற்ற உலக நாடுகளுக்கும் அடுத்த சில ஆண்டுகளில் இதே நிலைதான் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை விகிதம் சீராக இருக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் சரி விகிதத்தில் இருந்தால்தான் வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்கும். இறப்பு குறைந்து பிறப்பும் குறையும் சீரற்ற மக்கள் தொகை நாடுகளுக்கு சிக்கலைதான் ஏற்படுத்தும்.
இப்போது சீனா அந்தப் பிரச்சினையைதான் எதிர்கொண்டிருக்கிறது. ஒரு காலகட்டத்தில் மிக அதிகமான மக்கள் தொகையை சீனா கொண்டிருந்தது. அதிக மக்கள் தொகை வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் நாமிருவர் நமக்கு ஒருவர் போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வந்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது.
கடந்த வருடம் சீனாவின் மக்கள் தொகை எத்தனை லட்சம் அதிகரித்தது தெரியுமா? 4 லட்சத்து 80 ஆயிரம் புதிய வரவுகள்தாம். வருடத்துக்கு 70 லட்சம், 80 லட்சம் என்று அதிகரித்துக் கொண்டிருந்த சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் இந்த அளவு குறைந்திருக்கிறது. இதன் அபாயத்தை உணர்ந்த சீனா இப்போது அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள மக்களை வேண்டுகிறது. சீனாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து ஓய்வு பெற்ற மக்களின் நாடாக மாறிவிட்டது.
சீனாவின் நிலை இந்தியாவுக்கும் அடுத்த முப்பது ஆண்டுகளில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
சரி, இப்படியொரு பிரச்சினை வருமென்றால் அதிக குழந்தைகள் பெறுவதான் தீர்வா? இனி எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?
இல்லை, அதிகமாய் பெற்றுக் கொள்வதும் சிக்கல்தான் என்பதை கடந்த நூற்றாண்டில் அனுபவித்து விட்டோம்.
எனவே….குழந்தைப் பெற்றுக் கொள்வோம், அளவாய்.