No menu items!

வெல்லுமா இந்தியாவின் இளம் படை?

வெல்லுமா இந்தியாவின் இளம் படை?

இந்திய கிரிக்கெட் அணி பொதுவாக சோதனை முயற்சிகளை எடுப்பதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளெல்லாம் டி 20 கிரிக்கெட்டுக்கு ஒரு அணி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு அணி, ஒருநாள் போட்டித் தொடருக்கு ஒரு அணி என்று வைத்திருக்க, இந்தியா மட்டும் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி என மூத்த வீரர்களை மாற்றாமல் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே அணியை பயன்படுத்தி வந்தது.

இந்த சூழலில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வலுவான அணிக்கு எதிராக மூத்த வீரர்கள் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுத்துள்ளது இந்திய தேர்வுக்குழு.

இதற்கு முன்னரும் பல முறை இளம் வீரர்களைக் கொண்ட அணி போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் அவையெல்லாம் இலங்கை, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் போன்ற வலு குறைந்த அணிகளுக்கு எதிராகத்தான். தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஒரு இளம் அணியை களம் இறக்குவது இப்போதுதான் முதல்முறை. அந்த வகையில் இந்தியாவின் இளம் அணிக்கு இந்த தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

பயிற்சியாளராக ராகுல் திராவிட் உள்ள தைரியத்தில் இந்தச் சவாலை சந்திக்க துணிச்சலுடன் தயாராகி வருகிறது இளம் இந்தியப் படை.

நாளை நடக்கவுள்ள முதலாவது டி20 போட்டியில் ஆடும் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் போன்ற எதிர்கால நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் இறுதியில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் அதிகம் கவனிக்கப்படும் நபராக ஹர்த்திக் பாண்டியா உள்ளார். இந்திய அணியின் பினிஷராக சில காலம் செயல்பட்டாலும், காயம் காரணமாக பந்துவீச முடியாததால் சில காலம் இந்திய அணியில் இருந்து ஹர்த்திக் பாண்டியா ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டுவந்த ஹர்த்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் 4-வது வீரராக களம் இறங்கி 487 ரன்களைக் குவித்தார்.

இதனால் இந்த தொடரில் ஹர்த்திக் பாண்டியா எந்த வரிசையில் களம் இறங்குவார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதுதொடர்பான கேள்விக்கு நேற்று பதில் அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், “இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பற்றி இப்போது வெளிப்படையாக ஏதும் கூறமாட்டேன். ஐபிஎல் கிரிக்கெட் வேறு… சர்வதேச கிரிக்கெட் வேறு. ஐபிஎல்லில் ஆடியதை வைத்து ஒரு வீரரின் ஆட்டத்தை கணிக்க முடியாது. இந்திய அணியை பொறுத்தவரை, இதற்கு முன்பு ஒரு வீரர் எந்த இடத்தில் சிறப்பாக ஆடினாரோ, அந்த இடம் வழங்கப்படும்.

ஹர்த்திக் பாண்டியாவை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பினாலும், அவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

பேட்டிங்குடன் தற்போது பந்துவீச்சிலும் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்” என்றார்.

ராகுல் திராவிட்டின் பதிலை வைத்துப் பார்க்கும்போது, முதலாவது டி20 ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்டியா பினிஷராகவே களம் இறங்குவார் என்று தெரிகிறது. அதுபோல் இந்திய அணியின் தொடக்க ஜோடியாக கே.எல்.ராகுலும், இஷான் கிஷனும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை அனுபவமிக்க புவனேஷ்வர் குமாருக்கு துணையாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

பயிற்சியாளர் ராகுல் திராவிட்டைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரைவிட, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள உலகக் கோப்பைதான் இலக்கு. அதில் ஆடத் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு களமாகத்தான் இந்த தொடரை பார்க்கிறார்.

“இந்தியாவுக்காக ஆட தகுதியான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களைவிட எல்லா போட்டிகளிலும் சிறப்பாக பங்களிக்கக்கூடிய வீரர்கள்தான் அணிக்குத் தேவை” என்று கூறும் திராவிட், அவர் எதிர்பார்க்கும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் தொடராக இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

திராவிட்டின் லட்சியம் உலகக் கோப்பையாக இருந்தாலும், இப்போட்டியில் ஆடும் இளம் வீரர்களுக்கு இந்த தொடரின் வெற்றிதான் முதல் இலக்கு. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கடந்த 13 ஆட்டங்களில் ஒன்றில்கூட இந்திய அணி தோற்றதில்லை. அணியின் இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்து தக்கவைக்க வேண்டிய பொறுப்பில் இந்தியாவின் இளம் வீரர்கள் உள்ளனர்.

இந்த சவாலை இந்தியாவின் இளம் படை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...