பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் வெளியிட்ட வருகிறது. இதன்படி, 2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும் 3-வது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.
எல்கேஜி, யூகேஜி மூடப்படவில்லை – அமைச்சர் விளக்கம்
‘தமிழக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை” என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி அதிகாரிகள், “2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத் துறை தொடர்ந்து எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்தும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்பவில்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்” என்று அறிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து என புகார்: நூபுர் சர்மாவுக்கும் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. நூபுர் சர்மா கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதை அடுத்து இது சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, நூபுர் சர்மா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நூபுர் சர்மா புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கால அவகாசம் கோரி அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
கூடுதல் கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டது.
இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு மாதம் ஏழு நாட்கள் கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.