கிரிக்கெட்டில் ரன் மழை பெய்கிறதோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்களின் காட்டில் பண மழைக்குப் பஞ்சம் இருக்காது. போட்டிகளில் ஆடுவதற்காக வரும் சம்பளம் போதாதென்று விளம்பரங்கள் மூலம் வரும் வருமானம், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாங்கும் தொகை என எல்லா வகைகளிலும் கல்லா கட்டுவதில் கிரிக்கெட் வீரர்கள் கைதேர்ந்தவர்கள்.
இப்படி கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களில் பணம் பார்த்தது போதாதென்று சொந்தமாக தொழில் செய்தும் சிலர் பணம் ஈட்டி வருகிறார்கள். அப்படி தொழிலதிபர்களாகவும் இருக்கும் சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
சச்சின் டெண்டுல்கர்:
கிரிக்கெட்டில் மற்ற வீரர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பதைப் போலவே பணம் சம்பாதிக்கும் விஷயத்திலும் குருநாதராக இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் வீரராக இருக்கும்போதே விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஈட்டிய சச்சின் டெண்டுல்கர், 2013-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு மினி தொழிலதிபராகவே மாறிவிட்டார்.
சச்சின் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கும்போதே, முதலீடு செய்த நிறுவனம் முசாஃபிர் (musafir). சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும், நல்லெண்ணத் தூதுவராகவும் சச்சின் இருந்து வருகிறார். 2018-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 18 கோடி ரூபாய்.
சுற்றுலாவைச் சார்ந்தது என்பதாலோ என்னவோ, சஞ்சய் சாரங் என்பவரின் மார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மும்பையின் கொலாபா மற்றும் முலுண்ட் ஆகிய பகுதிகளில் ரெஸ்டாரண்ட்களை நடத்தி வருகிறார் கிரிக்கெட் கடவுள். இந்த ரெஸ்டாரண்டின் கிளை ஒன்று மும்பையிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்ரான் நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார்.
தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி விளையாட்டு சார்ந்த நிறுவனங்களிலும் சச்சினுக்கு ஆர்வம் அதிகம். அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணி (ஐஎஸ்எல்), டென்னிஸ் பிரீமியர் லீக்கில் மும்பை அணி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சச்சினின் காட்டில் பணமழையை பொழிகின்றன.
விராட் கோலி:
கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக விராட் கோலிக்கு பிடித்த விஷயங்கள் இரண்டு. முதல் விஷயம் உடை. அடுத்த விஷயம் ஃபிட்னெஸ். அதனாலோ என்னவோ, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்களையே நடத்தி வருகிறார் விராட் கோலி. ‘ராங்’ என்ற பெயரில் இவர் நடத்தும் ஃபேஷன் நிறுவனம் இளசுகளின் மனதுக்குப் பிடித்த உடைகளை வழங்குகிறது. கூடவே கோலிக்கு பணத்தையும்.
ஃபிட்னெஸை மேம்படுத்துவதற்காக ‘சிசெல் ஜிம்ஸ்’ என்ற பெயரில் இவர் நடத்தும் ஃபிட்னெஸ் செண்டர்கள் நாட்டின் முன்னணி நகரங்கள் பலவற்றிலும் சிறகை விரித்துள்ளன. இவை இரண்டையும் தவிர எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களைத் தயாரிக்கும் சீவா- மூவ்அகோசுடிக்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார்.
விளையாட்டுத் துறையையும் விட்டுவைக்காத விராட் கோலி, சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக்கில் யூஏஇ ராயல்ஸ் அணியை நடத்தி வருகிறார். எஃப்சி கோவா கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். மொத்தத்தில் கிரிக்கெட்டைப் போலவே தொழில் நிறுவனங்களை நடத்துவதிலும் சச்சினுக்கு வாரிசாக தடம் பதிக்கிறார் கோலி.
மகேந்திரசிங் தோனி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிக்குப் பிடித்த விஷயங்கள் வாகனங்களும், விளையாட்டும். தனது தொழில் முதலீட்டிலும் இவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார் தோனி.
உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் ’மஹி ரேஸிங் டீம் இந்தியா’, ஐ எஸ் எல் கால்பந்தில் விளையாடும் ’சென்னையின் எஃப்சி’, ஹாகிக் இந்தியா லீக்கில் விளையாடும் ’ராஞ்சி ரேஸ்’ ஆகிய அணிகளில் தோனியின் முதலீடு அதிகம். இவை போதாதென்று ஸ்போர்ட்ஸ் ஃபிட் என்ற பெயரில் பிட்னெஸ் நிலையங்களையும் நடத்துகிறார் தோனி.
கார்களின் மீது தனக்குள்ள காதலை நிரூபிக்கும் வகையில் ‘கார்ஸ்24’ நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து நடத்தி வருகிறார். ’செவன்’ என்ற பெயரில் காலணி பிராண்டையும் நடத்திவரும் தோனி, சமீபத்தில் ‘கதாபுக்’ என்ற வர்த்தக நிறுவனத்திலும் தன் கிளையைப் பரப்பியுள்ளார். மொத்தத்தில் அரை டஜன் பிசினஸ் நிறுவனங்கள் தோனியின் தயவில் உள்ளன.
கபில்தேவ்:
சச்சின், கோலி, தோனியோடு போட்டிபோடும் அளவுக்கு கிரிக்கெட்டில் பணம் சம்பாதிக்காதவர் கபில்தேவ். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற காலத்திலேயே இவர் வாங்கிய சம்பளம் 2,100 ரூபாய்தான். விளம்பர வருவாயும் அக்காலத்தில் அதிகமாக இல்லை.
இருப்பினும் ஓய்வுக்கு பிறகு மற்றவர்களுக்கு இணையாக தானும் சில தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து நடத்தி வருகிறார் கபில்தேவ். ‘தேவ் மஸ்கோ லைட்டிங் பிரைவெட் லிமிடட்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் கபில்தேவ், புகழ்பெற்ற சைகோம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மேலும் ‘கேப்டன்ஸ் லெவன்’, ’கேப்டன் ரிட்ரீட்ஸ் ஹோட்டல்’ ஆகிய பெயர்களில் சண்டிகர் மற்றும் பாட்னாவில் ஓட்டல்களை நடத்தி வருகிறார்.