கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஈரோடு தமிழன்பன், புவியரசு, இ. சுந்தரமூர்த்தி, பூமணி, கு. மோகனராசு, இமையம் ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தல் முடிவுகள்: உத்தராகண்ட்டில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ், ஒடிசாவில் பிஜு ஜனதா வெற்றி
உத்தராகண்ட், கேரளா, ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது.
உத்தராகண்ட் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. இதனையடுத்து, அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவில் திருக்காகரை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜோ ஜோசப்பை, காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட உமா தாமஸ் 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பிரஜ்ராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட அல்கா மோஹேன்டி வெற்றிபெற்றுள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது: ரூ. 10 லட்சம் பரிசு ஆரூர்தாசுக்கு வழங்கப்பட்டது
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்த ஆண்டுக்கான விருதாளரை தேர்ந்தெடுக்க எஸ்.பி. முத்துராமன், நாசர், கரு. பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாசை (வயது 90) தேர்ந்தெடுத்தது.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தி.நகரில் உள்ள ஆரூர்தாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு ஆரூர்தாசுக்கு பொன்னாடை போர்த்தி, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில் 1 மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 22 அரசுப் பள்ளிகள்: அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் வரும் 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், “தமிழ்நாட்டில் 22 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவரும் ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், 2 மாணவர்கள் 24 பள்ளிகளிலும், 3 மாணவர்கள் 41 பள்ளிகளிலும், 4 மாணவர்கள் 50 பள்ளிகளிலும், 5 மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர். 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் படித்து வருகின்றனர்” என்கிற தகவல் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 100ஆவது நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றிய ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலிக் காட்சி வழியாக உரையாற்றும்போது, “உக்ரைனின் 1 லட்சத்து 25 ஆயிரம் ச.கி.மீ. பகுதி தற்போது ரஷியாவின் கைகளுக்கு போய் உள்ளது. இதில் கிரீமியா, கிழக்கு உக்ரைன் பகுதிகள் அடங்கும்” என தெரிவித்தார்.