No menu items!

மிஸ் ரகசியா : பாஜகவில் சசிகலா?

மிஸ் ரகசியா : பாஜகவில் சசிகலா?

“பத்தல பத்தல
குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
மத்தளம் அட்றா டேய் சுத்த மத்தளம் அட்றா டேய்” என்று விக்ரம் படப் பாடலை பாடிக்கொண்டே உற்சாகமாய் உள்ளே நுழைந்தார் ரகசியா.

“காலை 5 மணிக்கே ஸ்பெஷல் ஷோவுக்கு போய் வந்த கெத்தா…” என்றவாறு வரவேற்றோம்.

“நாலு வருஷத்துக்குப் பிறகு வரும் கமல் படமாச்சே… விட்டுட முடியுமா. என்ன தூக்கம்தான் கொஞ்சம் கெட்டுப் போச்சு. இருந்தாலும் கமல் ஏமாத்தலை” என்றார் ரகசியா.

“கமல் ஏமாத்தாதது இருக்கட்டும். நீ எங்களை ஏமாத்தாம நியூஸைக் கொடு.”

“தமிழக அரசியல்ல இப்போதைக்கு அதிமுக பொதுக்குழுதான் ஹாட் டாபிக். ஓபிஎஸ், இபிஎஸ் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கிற இந்த கூட்டத்துல சசிகலா, ஒற்றைத் தலைமை, பாஜகவின் வளர்ச்சி எதிர்காலத் திட்டங்கள்னு பல விஷயங்களைப் பத்தி பேசப்படலாம்னு சொல்றாங்க. இந்த கூட்டத்துக்கான டிரெய்லராதான் பொன்னையனோட பேச்சைப் பாக்கிறாங்க.”

“ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவு இல்லாம பொன்னையனால இப்படி பேச முடியுமா?”

“அப்படித்தான் பாஜகவும் சந்தேகப்படுது. குறிப்பா எடப்பாடி மேல சந்தேகப்படறாங்க. பாஜக இத்தனை தீவிரமா அரசியல் பண்ணும்னு அதிமுக நினைக்கல. முக்கியமா அண்ணாமலை தொடர்ச்சியா பண்ற அரசியல் எடப்பாடியை யோசிக்க வச்சிருக்கு. அண்ணாமலை டாப் கியர்ல போய்ட்டு இருக்கிறதால அவருக்கு பிரேக் போடப் பாக்கிறாரு. பொன்னையன் பேச்சை அப்படிதான் பாக்கணும். அது மட்டுமில்லாம, பாஜகவோட வளர்ச்சி ஓபிஎஸ்க்கு சாதகமாக மாறும்னு எடப்பாடி அணி நினைக்குது. இப்பவே முறைப்பு காட்டிட்டா நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜகவுக்கு குறைஞ்ச சீட்டை ஒதுக்க முடியும்னு எடப்பாடி கணக்கு போடுறார்.”

“அதிமுக பொதுக்குழுவுல வேற என்ன பேசப் போறாங்களாம்?”

“மதுசூதனனோட மறைவுக்குப் பிறகு கட்சியோட தற்காலிக அவைத் தலைவரா தமிழ்மகன் உசேன் இருக்காரு. இப்ப நிரந்தர அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டி இருக்கு. இந்த கூட்டத்துல அதுக்கு தீர்வு காணப்படலாம். ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்காத வருத்தத்துல இருக்கிற டி.ஜெயக்குமார், இந்த பதவிக்கு குறிவைச்சிருக்கார்.”

“பாரதிய ஜனதா கட்சியில சசிகலா இணைந்தால் வரவேற்போம்னு நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்காரே?”

“அவர் சசிகலான்னு சொல்லல. சின்னம்மான்னுதான் சொல்லியிருக்காரு. அவருக்கு இன்னும் பழைய பாசம் போகலைங்கிறது இதுல இருந்தே தெரியுதுன்னு சொல்லி பாஜக தலைவர்கள் சிலர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க. சசிகலாவை சேர்க்கிறதைப் பத்தி பெரிய தலைவர்கள்தான் முடிவு செய்யணும்னு அண்ணாமலை சொல்ல, அந்த பெரிய தலைவர்கள் சொல்லித்தான் நான் அப்படி பேசினேன்னு நயினார் நாகேந்திரன் சொல்லிட்டு இருக்காராம்.”

“அவங்க சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் இப்படி பேசியிருப்பாரோ?”

“பாஜகவுல சசிகலாவை விரும்புகிற சக்திகள் நிறைய இருக்கு. கட்சி மேலிடமும் சசிகலாவால் தன் சமூகத்து வாக்குகளைப் பெற முடியும் என்று நம்புகிறது.”

”இவங்க இழுக்கிறது இருக்கட்டும்… அதுக்கு சசிகலா ஒத்துக்கணும்ல. அவங்க அதிமுகவுக்கு தலைமை ஏற்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே.”

”முழுசா கேளுங்க. சசிகலா, பாஜகவுல இணையறதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. ஆனால், சசிகலாவை முக்கிய சக்தியா பாஜக கருதுகிறதுன்றதைதான் நயினார் நாகேந்திரன் பேச்சு காட்டுகிறது. சசிகலாவின் முக்கியத்துவத்தை அதிமுகவுக்கு சொல்லாம சொல்லியிருக்காங்க. முடிவெடுக்கிறது அதிமுக கைல.”

“சசிகலா என்ன நினைக்கிறாங்களாம்?”

“சசிகலா தரப்புல இதை நகைச்சுவையா நினைச்சு கடந்து போறாங்க. அதிமுகவுல சேர்ந்தாதான் அவங்களுக்கு பலம். பாஜகவுல சேர்ந்தா அவங்க சமூக ஓட்டே அவங்களுக்கு முழுசா வராதுனு நினைக்கிறாங்க. அதனால் பாஜகவுல சேருங்கன்றதுலாம் ஒரு நாள் நியூஸ் மட்டுமே?”

”குடியரசுத் தலைவர் தேர்தல் எந்த அளவுல இருக்கு?”

“ஹைதராபாத்ல ஜூலை மாதம் பாஜக அகில இந்திய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடக்கப் போகுது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்னு பல விஷயங்களைப் பத்தி ஆலோசனை நடத்தப் போறாங்க. எப்பவும் வட மாநிலங்கள்லதான் கட்சியோட செயற்குழு கூட்டம் நடக்கும். தொடர்ந்து பிரதமருக்கு எதிரா பேசிட்டு வர்ற தெலங்கானா முதல்வருக்கு செக் வைக்கிறதுக்காக இந்த முறை ஹைதராபாத்ல கூட்டத்தை நடத்தறாங்க. தென்னிந்தியா மேல பாஜக தீவிர கவனம் செலுத்தறது இதுக்கு இன்னொரு காரணம்.”

“முதல்வரின் டெல்டா பயணம் பற்றி ஏதாவது செய்தி இருக்கா?”

“திருச்சியில் முதல்வர் நிருபர்கள் சந்திக்கும்போது ஒரு நிருபர், ‘அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் எல்லாம் முன்கூட்டியே எப்படி அண்ணாமலைக்கு போகிறது?’ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு முதல்வர், ‘அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நான் மக்களுக்கு நன்மை செய்கிறேன்’ன்னு மட்டும் சொல்லி முடிச்சிட்டார். ஆனால், அவருக்கும் அந்த சந்தேகம் இருந்திருக்கு. அதனால சென்னைக்கு திரும்பினதும் அண்ணாமலைக்கு அரசு ரகசியங்கள் கசிவது எப்பன்னு விசாரிக்க உத்தரவு போட்டிருக்கார். அவருக்கு கிடைத்த தகவல் அண்ணாமலை தனது பழைய ஐபிஎஸ் தொடர்புகளை வைத்து இங்கு இருக்கும் காக்கி சட்டைகளிடம் விஷயத்தை வாங்கிடறார்னு தெரிஞ்சிருக்கு. அதனால அதிகாரிகள் மாற்றம் உடனடியா இருக்கலாம்னு சொல்றாங்க.”

“கோட்டை வட்டாரத்தில் வேறு ஏதாவது செய்திகள் இருக்குதா?”

“கோட்டையில் முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரம் இப்போதைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுதானம். துபாய் போகும்போதும், பிரதமரை சந்திக்கப் போனபோதும், ஆளுநரை சந்திக்க போகும் போதும் அவரை கூடவே வச்சிருந்தார் முதல்வர். எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்கு சுட சுட அறிக்கை மூலம் பதில் சொல்றதும் தங்கம் தென்னரசுதான். முதல்வரின் காதுக்கு ஏதாவது முக்கிய விஷயம் எட்டணும்னா தங்கம் தென்னரசுகிட்ட சொன்னா போதும்னு கோட்டை வட்டாரத்துல பேசிக்கிறாங்க.”

“ஆளுநர் – முதல்வர் சந்திப்புல ஏதாவது சுவாரஸ்யமான செய்தி இருக்கா?”

“முதல்வர் ஆளுநரை சந்திக்கப் போறார்னு தெரிஞ்சதும் சில அமைச்சர்களுக்கு பிபி எகிறி இருக்கு. குறிப்பா தங்களோட பதவி கொஞ்சம் நாள்ல காணாம போயிடலாம்ங்கிற சந்தேகத்துல இருந்த அமைச்சர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகி இருக்காங்க. ஆனா சந்திப்புக்கு காரணம் அமைச்சரவை மாற்றம் இல்லை. மசோதாக்களை நிறைவேத்தறதுதான்னு தெரிஞ்சதும் ரிலாக்ஸ் ஆகி இருக்காங்க.”

“அன்புமணி தலைவர் ஆன பிறகு தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்திச்சுட்டு வர்றாரே?”

“2026-ல் பாமக ஆட்சி அமைக்கும்னு தொண்டர்கள்கிட்ட அன்புமணி சொல்றாரு. ஆனா கட்சிக்காரங்க இதை நம்பல. ‘கூட்டணி, தொகுதி உடன்பாடு பத்தி 2 இரண்டு ஐயாகளும் எந்த காலத்தில் நிர்வாகிகளை கலந்து பேசினாங்க. எல்லாத்தையும் தைலாபுரத்துல முடிவு செஞ்சுட்டு அப்புறம்தான் பொதுக்குழுவுல சொல்வாங்க. இப்போது தனித்துப்போட்டி என்கிறார்கள் தேர்தல் நேரத்தில் பேரம் பேசி தொகுதிகளை வாங்கிடுவாங்க’ என்ரு புலம்புகிறார்களாம் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.”

“காங்கிரஸ் கட்சி செய்திகள் ஏதாவது இருக்கா?”

“தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்னு கோரிக்கை வச்சிருக்கார். ஆனால், இதுபத்தி நிருபர்களை அழைத்து பேசுவதற்கு அவர் சத்தியமூர்த்தி பவனை தேர்ந்தெடுக்கலை. மாறாக பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இப்படி திடீரென கோரிக்கை வைத்தது பார்த்து காங்கிரஸ் கோஷ்டிகள் எதுவும் புரியாமல் குழம்புகிறார்கள்.”

“சிந்தாதிரிப்பேட்டையில நடந்த பாஜக நிர்வாகி கொலை விஷயத்துல அந்த கட்சித் தலைவர்கள் ஏதும் சொல்லாம இருக்காங்களே?”

“அந்த நிர்வாகி மேல் ஏற்கெனவே 4 கொலை வழக்கு உள்பட வில்லங்கமான விஷயங்கள் இருக்குதாம். அவரைப் பற்றிய பல விஷயங்களை போலீஸார் மூலமா ஆளுங்கட்சிக்காரங்க கையில வச்சிருந்தாங்க. அதனால இதைக் கிளப்பி அசிங்கப்பட வேண்டாம்னு விட்டிருக்காங்க. அந்த நிர்வாகியை கட்சியில் சேர்த்தது முன்னாள் தலைவர் இந்நாள் அமைச்சர் முருகன்னும் சொல்றாங்க.”

“கட்சில தொண்டர்கள் சேர்கிறார்களோ இல்லையோ இந்த மாதிரி ஆட்கள் நிறைய அந்தக் கட்சில சேர்றாங்க. தரமான தங்கமான ஆட்களை சேர்த்தாதானே தமிழ்நாட்டுல தாமரை மலரும்.”

“அட்வைஸ்லாம் அண்ணாமலைக்கு கொடுங்க. நான் கிளம்புகிறேன்” என்று கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...