பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
“அன்புமணியை ஒட்டுமொத்த தமிழக மக்களும் வாழ்த்த வேண்டும், தமிழ் நாட்டுக்கு மிக சிறந்த நல்லாட்சியை வழங்குவதற்காக அன்புமணியை பாமக தேர்ந்தடுத்துள்ளது” என்று திருவேற்காட்டில் நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் அன்புமணியை வாழ்த்துவார்களா? தமிழ் நாட்டை ஆளும் அளவுக்கு பாமக வளருமா?
இந்தக் கேள்விகளுக்கும் முன் பாமக கடந்து வந்த பாதையை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்து அ.இ.அ.தி.மு.க.வைத் துவக்கிய பிறகு பல ஆண்டுகள் வேறு பெரிய கட்சிகள் எதுவும் உருவாகவில்லை. சில தலைவர்கள் துவக்கிய கட்சிகளுமே காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. அப்படி துவக்கப்பட்ட கட்சிகளும் திராவிடக் கட்சிகளின் கிளைக் கட்சிகளாகவே துவக்கப்பட்டன.
அ.இ.அ.தி.மு.க. உருவாக்கத்துக்குப் பிறகு பிறந்த முதல் பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சொல்லலாம். திராவிடக் கட்சிகளில் இருந்து உருவாகாமல் சாதிச் சங்கத்தின் நீட்சியாக உருவானது இந்தக் கட்சியின் இன்னொரு தனித்துவமான விஷயம்.
1989-ம் ஆண்டு உருவான, இன்று தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக வளர்ந்திருக்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது.
துவக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முன்னோடியான வன்னியர் சங்கத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகள், போராட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திலுள்ள சமுதாயங்களில் மிக முக்கியமான சமுதாயமாக, அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருக்கிறது. தமிழகத்தின் வட மாநிலங்களிலும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு முறையான ஒதுக்கீடு இல்லை, தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது இவர்களது நீண்ட கால குறை, கோரிக்கை. இதற்காக அவ்வப்போது போராட்டங்களும் நடந்துக் கொண்டிருந்தன. வன்னிய சமுதாயத்தினருக்காக பல அமைப்புகளும் சங்கங்களும் தனித்தனியே இயங்கிக் கொண்டிருந்தன.
1980களில் இந்த சங்கங்களையும் அமைப்புகளையும் இணைத்து ஒரே அமைப்பாக மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியை முன்னின்று எடுத்தவர் திண்டிவனத்தில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ். 28 வன்னியர் அமைப்புகளை இணைத்து வன்னியர் சங்கம் என்ற பொதுப் பெயரில் ஒரு சங்கத்தை டாக்டர் ராமதாஸ் 1980ஆம் வருடம் ஜூலை 20ஆம் தேதி துவக்கினார். அந்த சமயத்தில் வன்னிய சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களாக இருந்த ஏ.கே.நடராஜன், வன்னிய அடிகளார் போன்றவர்கள் ராமதாஸுடன் இணைந்து வன்னியர் சங்கத்தில் பணியாற்றினார்கள். இந்த சங்கம் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் கருதவில்லை.
வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துக் கொள்வதற்கு முன்பு டாக்டர் ராமதாஸின் பின்னணியைப் பார்த்து விடுவோம்.
ராமதாஸ் யார்?
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்சிவரி என்ற ஊரில் பிறந்தவர் ராமதாஸ். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1967லில் மருத்துவத்தை முடித்த ராமதாஸ், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனியாக மருத்துவத் தொழில் செய்து வந்தார். அந்த சமயத்திலேயே ராமதாஸுக்கு வன்னியர் சமுதாயப் பணிகளில் ஈடுபாடு இருந்தது. இதன் தொடர்ச்சியாகதான் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை உருவாக்கினார்.
வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள்
வன்னியர் சங்கம் துவக்கப்பட்டபோது ’நான் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ செல்ல மாட்டேன், சங்கத்தில் எந்த பொறுப்பையும் வகிக்க மாட்டேன், என் சொந்த செலவில்தான் சங்க வேலைகளை செய்வேன்’ என்று ராமதாஸ் உறுதியளித்தார்.
ராமாதாஸ் நிறுவிய வன்னியர் சங்கம் தீவிரமாக பணிபுரியத் துவங்கியது. வன்னியர் சங்கத்தின் சார்பாக கனல் என்ற பத்திரிகை துவக்கப்பட்டது. அதில் வன்னியர்கள் உணர்வை எழுப்பும் வகையில் அதில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ராமதாஸ் பல கட்டுரைகள் எழுதினார். வன்னியருக்கு இருபது சதவீத தனி இட ஒதுக்கீடு என்பதுதான் வன்னியர் சங்கத்தின் முக்கிய குறிகோளாக இருந்தது.
20 சதவீத இடஒதுக்கீடுக்காக வன்னியர் சங்கம் தொடர்ந்து பலவிதப் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியது. தமிழக அரசுக்கு பல மனுக்களை அளித்தது. ஆனால், அதனால் தமிழக அரசின் கவனத்தை கவர இயலவில்லை. தமிழக அரசு வன்னியர் சங்கத்தை அழைத்துப் பேசவில்லை. அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடந்துக் கொண்டிருந்தது.
பல போராட்டங்களுக்குப் பிறகு 1987ல் தமிழகத்தில் நடந்த சாலை மறியல் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் அதிர்ச்சியுடன் ஈர்த்தது. ஏனென்றால் அந்தப் போராட்டத்தில் நடந்த வன்முறை அப்படி.
வன்னியர் சங்கத்தின் சாலை மறியல் போராட்டம்
இட ஒதுக்கீடு கோரி 1987ல் செப்டம்பர் 17 முதல் 23 வரை தமிழகத்தில் சாலை மறியல் நடத்தப் போகிறோம் என்று வன்னியர் சங்கம் அறிவித்தது. அப்போது தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். வன்னியர் சங்க அறிவிப்புக்கு தமிழக அரசிடமிருந்து பொறுப்பான பதில் எதுவும் இல்லை.
செப்டம்பர் 16 நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் துவங்கியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் போராட்டம் துவங்கியது. வன்னிய சமுதாய இளைஞர்கள் சாலைகளை மறித்தார்கள். சாலையோர மரங்களை ஏராளமாய் வெட்டி சாலைகளின் குறுக்கே போட்டனர். போக்குவரத்து நின்றது. தமிழகம் ஸ்தம்பித்தது. இது தமிழக அரசு எதிர்பார்க்காதது. இத்தனை பெரிய போராட்டமாக இருக்கும் என்று யூகிக்காத தமிழக அரசினால் உடனடியாக எதிர் நடவடிக்கைகளை எடுக்க இயலவில்லை.
வழக்கமாய் செப்டம்பர் 15,16 ஆகிய தேதிகளில் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெறும். அந்த வருடமும் அப்படி நடந்தது. அந்த விழாவில் கலந்துக் கொண்டு 16ஆம் தேதி இரவு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த பல தி.மு.க.வினரின் வாகனங்கள் வன்னியர் சங்கத்தின் போராட்டத்தினால் தடுக்கப்பட்டன. இதனால் வன்னியர் சங்கத்தினருக்கும் தி.மு.க. தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். வன்னியர் சங்கத்தினர் பலர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானர்கள். தமிழகத்தின் அமைதி வரலாற்றில் இந்த நாட்கள் கருப்பு நாட்களாக அமைந்துவிட்டன.
ஏழு நாட்கள் நடந்த இந்த வன்முறை நிறைந்த போராட்டத்துக்குப் பிறகு வன்னியர் சங்கத்திடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது. போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசும் தமிழக அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்த அந்த அறிக்கை வன்முறை குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கேட்டுக் கொண்டது.
அரசுடன் பேச்சு வார்த்தையும் இட ஒதுக்கீடும்
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த சூழலில் அரசை நிர்வாகித்துக் கொண்டிருந்த மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன்,வன்னியர் சங்கத்துடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தாது, ராமதாஸ் உட்பட்ட வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வன்முறையில் ஈடுபட்டதாக 20,461பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். நவம்பர் மாத இறுதியில் ராமதாஸ் உட்பட்ட வன்னியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். அவரிடம் வன்னியர் சங்கத்தின் பன்னிரெண்டு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். பல சாதி சங்களை அழைத்து இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. அந்த டிசம்பரில் எம்.ஜி.ஆர். மறைந்தார். அதைத் தொடர்ந்து ஜானகி ஆட்சி வந்து அதுவும் கலைக்கப்பட்டது. பிறகு கவர்னர் ஆட்சி வந்து இரண்டு வருடங்கள் நீடித்தது.
திமுக தந்த இட ஒதுக்கீடு
1989 ஜனவரி மாதம் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் அறிவித்தது. இதற்கிடையே ஜானகி எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும், அதன்பின் வந்த கவர்னர் ஆட்சியிலும் பிறகு ஜனாதிபதியிடமும் வன்னியர் சங்கம் தங்களது கோரிக்கைகளை அளித்தது. ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்தே தேர்தல் புறக்கணிப்பு.
அந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் வன்னியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தன. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு ஆளுநர் அலெக்சாண்டர் வன்னியர்களின் கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அவற்றை ஆராய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் முடிந்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வரானார். ஆட்சிக்கு வந்ததுமே டாக்டர் ராமதாசையும் வன்னிய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் கருணாநிதி. பிறகு இந்தப் பிரச்சனை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து வரும் பிற்படுத்தபட்டொருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு பிரிக்கப்பட்டு வன்னியர் உட்பட சில குறிப்பிட்ட சமுதாயங்களை இணைத்து அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் என்று குறிப்பிட்டு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்று குறிப்பிட்டது.
தமிழக அரசின் இந்த முடிவை வன்னியர் சங்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்த வன்னிய அடிகள் வரவேற்றார். ஆனால், டாக்டர் ராமதாஸ் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். வன்னியர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதற்கு பதில் உப்பையும் மிளகாய்த் தூளையும் தேய்த்துவிட்டிருக்கிறார் கருணாநிதி என்று குறிப்பிட்டார். பத்து சதவீத இடஒதுக்கீடு கொடுத்தாலும் வன்னியர்களுக்கென்று தனியாக தாருங்கள் என்பது அவர் வாதம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் துவக்கம்
இந்தப் பின்னணியில்தான் பாட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்டது. அன்று சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம், மனித நேயம் ஆகியவைதான் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோள் என்று குறிப்பிட்டார் ராமதாஸ். கட்சியின் தலைவராக வன்னியரும் பொதுச் செயலாளராக தலித் சமூகத்தை சார்ந்தவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் தலைவராக வன்னியரான பேராசிரியர் தீரனும் பொதுச் செயலாளராக தலித் எழில்மலையும் பொறுப்பேற்றார்கள்.
இந்த கடற்கரைக் கூட்டத்தில் ராமதாஸ் ஐந்து சத்தியங்களை செய்தார்.
- நான் கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பதவியிலும் இருக்க மாட்டேன்.
- தேர்தலில் போட்டியிட மாட்டேன். நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ செல்ல மாட்டேன்.
- என் சொந்த செலவில்தான் கட்சிப் பணிகளை செய்வேன்.
- எனது வாரிசுகளோ சந்ததியினரோ எந்தக் காலத்திலும் கட்சிப் பணிக்கோ சங்கப் பணிக்கோ வர மாட்டார்கள்.
- நான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலை போக மாட்டேன்.
இந்த உறுதிமொழிகளை சொன்ன்ன ராமதாஸ், நான் இவற்றை மீறினால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றும் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த தேர்தல்கள்
பாட்டளி மக்கள் கட்சி உருவானப் பிறகு 1991ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டது. தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகதான் முதலில் கூறியிருந்தது. ஆனால், பல சிறு கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. அப்துல் சமது பிரிவு முஸ்லீம் லீக், பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசு கட்சி, நெடுமாறனின் தமிழ் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமை கட்சி என பல கட்சிகள் பாமக கூட்டணியில் இருந்தன. இந்தத் தேர்தலில் பாமக 199 தொகுதிகளில் போட்டியிட்டது. சட்டமன்றத் தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 31 இடங்களில் பாமக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் 5.9 சதவீத வாக்குகளை பாமக பெற்றது. மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றிப் பெறவில்லை. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
1996 தமிழக சட்டமன்றத் தேர்தல் நான்கு முனை தேர்தலாக உருவானது. திமுக, அதிமுக,பாமக, மதிமுக தலைமையில் கூட்டணிகள் உருவாகின. பாமக கூட்டணியில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் உட்பட 12 கட்சிகள் இணைந்திருந்தன. இந்தத் தேர்தலில் பாமக 116 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்ட பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. சிதம்பரம் தொகுதியில் மட்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்த இரண்டுத் தேர்தல்களில்தான் பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன் பின் 2016 வரை நடந்த பொதுத் தேர்தல்களில் திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோதான் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது பாமக. 2016ல் மீண்டும் தனித்து களம் கண்டது.
1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஐந்து இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது. சிதம்பரம் தொகுதியில் வென்ற தலித் எழில்மலை மத்திய அரசில் இணையமைச்சராக பொறுப்பேற்றார். 6 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் பாமக பெற்றது.
1999ஆம் வருடம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் திமுக – பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் வென்றது. இந்த முறை மத்திய அமைச்சரவையில் இரண்டு இணை அமைச்சர்கள் பொறுப்பு பாமகவுக்கு கிடைத்தது. 8.2 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் பாமக பெற்றது.
2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வென்றது. 5.6 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக – காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. முதன் முறையாக அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரானது காங்கிரஸ் ஆட்சியில்தான். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தத் தேர்தலில் 6.4 சதவீத வாக்குகளை பாமக பெற்றது.
2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. இந்தத் தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றிப் பெற்றது. 5.6 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 6.8 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. 8 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது. அந்தத் தொகுதியில் வென்றவர் அன்புமணி ராமதாஸ். இந்தத் தேர்தலில் 4.4 சதவீத வாக்குகளை பாமக பெற்றது.
2016 தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தல்: இந்தத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. திமுக அணி, அதிமுக அணி, இடதுசாரிகள், மதிமுக, விசிக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என்று பிரிந்திருந்த தேர்தல் களத்தில் பாமகவும் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பாமக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 234 தொகுதிகளில் போட்டியிட்டு 5.3 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2019 நாடாளுமன்றத் தேர்தல்: 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்று முடிவெடுத்திருந்த பாமக இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இந்தத் தேர்தலின் போது தமிழ் நாட்டின் தனிப் பெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்டிருந்தனர். இந்தத் தேர்தலில் பாமக 3.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
2021 தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தல்: இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, தமாகா போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து 23 இடங்களில் போட்டியிட்டது. 3.8 சதவீத வாக்குகளைப் பெற்று ஐந்து இடங்களில் வென்று மீண்டும் சட்டப் பேரவைக்குள் நுழைந்தது பாமக.
அன்புமணி ராமதாஸ் கடந்து வந்த பாதை:
அன்புமணி ராமதாஸ் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். லண்டனில் பொருளாதாரம் படித்தவர். சில காலம் திண்டிவனம் அருகே மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச் சூழல் அமைப்பான பசுமைத் தாயகத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். கூடவே பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்கத் துவங்கினார். 2004ல் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பொறுப்பேற்று சில மாதங்கள் கழித்துதான் ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு மற்றும் உறுப்பினர்களின் ஆதரவினாலேயே அன்புமணி ராமதாசுக்கு பதவிகள் கிடைக்கின்றன என்று அப்போது ராமதாஸ் தெரிவித்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சி தேர்வு செய்திருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற வாசகங்களுடன் 2016 சட்டப் பேரவைத் தேர்தலை பாமக சந்தித்தது. மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
சாதனைகளும் சர்ச்சைகளும்
சாதிப் பிண்ணனியை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தின் முக்கிய கட்சிளில் ஒன்றாக இருக்கிறது. வன்னியர் சங்கப் போராட்டத்தின்போது மரங்கள் வெட்டப்பட்ட விமர்சனத்தை போக்க பசுமைத் தாயகம் என்ற அமைப்பை 1995 நிறுவி சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
புகைப்பழக்கத்துக்கு எதிராகவும் மதுவுக்கு எதிராகவும் பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் பொதுஇடங்களில் புகைபிடிக்க தடை கொண்டு வரப்பட்டது. சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை படங்களை அச்சிட உத்தரவு போடப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் திட்டமும் அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.
சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் சர்சைகளும் பாமகவை தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது தொடர்ந்து வைக்கப்படுகிறது. பாமக நிறுவனர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். 1998 மத்திய மந்திரிசபையில் பாமக இணைந்தபோது மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றவர் தலித் எழில்மலை. ஆனால் இவரே பாமகவில் தலித்துகளுக்கு இடமில்லை என்ற குற்றச்சாட்டைக் கூற் பாமகவைவிட்டு 1999ல் விலகினார்.
தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் போன்றவற்றில் பாமகவினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.
காதல் திருமணங்களை நாடகக் காதல் என்று பாமக வர்ணிப்பதும் சாதி ஆணவக் கொலைகளை மென்மையாக கண்டிப்பதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2002ல் ரஜினிகாந்தின் பாபா படம் வெளியான போது பாமக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. டாக்டர் ராமதாஸ் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்.
விஜயகாந்துடனும் பாமக ஆரம்பத்தில் மோதல் போக்கையே கையாண்டது. ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன.
சாதிப் பின்னணியும் சர்ச்சைகளும் நிறைந்த கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்தாலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.
1999 நாடாளுமன்றத் தேர்தலில்தான் பாமக மிக அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றது. 8.2 சதவீதம். 2016 தேர்தல் வரை சராசரியாக 5.5 சதவீத வாக்குகளைப் பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் சுமார் 3.5 சதவீத வாக்குகளைதான் பெற்றிருக்கிறது.
2016 தேர்தலில் அன்புமணியை முதல்வராக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் பாமக பெரும் முயற்சி எடுத்தது. தமிழக தேர்தல் களமும் பல அணிகளாக பிரிந்திருந்தது. ஆனாலும் பாமக பெற்றது 5.3 சதவீத வாக்குகள்தாம். ஒரு இடத்திலும் வெற்றி பெற இயலாதது அதன் வீச்சை புரிய வைத்தது. சாதிக் கட்சி என்ற பிம்பத்தை தாண்டி தமிழ் நாட்டு முழுமைக்கான கட்சியாக தன்னை கட்டமைக்க முயன்றது பெரும் தோல்வியை சந்தித்தது.
பாமகவின் மிகப் பெரிய சிக்கலாகவும் தடையாகவும் இருப்பது மேற்கு மற்றும் வடக்கும் மாவட்டங்களுக்கான சாதிக் கட்சியாக மட்டும் அது பார்க்கப்படுவது.
புலி வால் பிடித்த கட்சியாக பாமக இருந்து வருகிறது. சாதிக் கட்சி என்ற பிம்பத்தை கலைத்தால்தான் அதனால் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கான கட்சியாக மாற முடியும். ஆனால், அந்த பிம்பத்தை கலைத்தால் அதன் பிரதான சாதி வாக்கு வங்கி சரியும்.
இந்த சிக்கலை அடுத்த தலைமுறை தலைவரான அன்புமணி ராமதாஸ் எப்படி சரி செய்து சமாளிக்கப் போகிறார் என்பதுதான் பாமக முன் இருக்கும் ஒரே கேள்வி.