No menu items!

ஷேன் வார்னுக்காக கோப்பையை வெல்லுமா ராஜஸ்தான்?

ஷேன் வார்னுக்காக கோப்பையை வெல்லுமா ராஜஸ்தான்?

கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக தொலைக்காட்சி முன் கட்டிப் போட்டிருந்த ஐபிஎல் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் ஜெயிக்கும் என்று பலரும் பெட் கட்டிக்கொண்டிருந்த நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் அணிகள் சத்தமில்லாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததுள்ளன. இந்த இரு அணிகளில் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு நாளை விடை தெரிந்துவிடும்.

இந்த சூழலில் இறுதிப் போட்டியில் ஆடும் இரு அணிகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்:

குஜராத் டைட்டன்ஸ்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்முறை புதிதாக களம் இறங்கிய அணி குஜராத் டைட்டன்ஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல்லில் ஆடிய ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர்களான சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் 7,090 கோடி ரூபாயைக் கொடுத்து இந்த அணியை வாங்கியுள்ளது.
குஜராத் அணியை வாங்கிய கையோடு ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், ரஷித் கான் ஆகிய மூன்று வீரர்களை ஏலத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்த அணி நிர்வாகம் அதன் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. தொடர் காயங்களால் அவதிப்பட்டு இந்திய அணியைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது அப்போது பலரது புருவங்களையும் உயர்த்தியது.
ஆனால் தன்னால் சிறந்த ஆல்ரவுண்டராக மட்டுமின்றி சிறந்த கேப்டனாகவும் இயங்க முடியும் என்பதை லீக் ஆட்டங்களில் நிரூபித்துள்ளார் ஹர்த்திக் பாண்டியா.

கடைசி 5 ஓவர்களில் வந்து ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்…” ஸ்டைலில் அதிரடி காட்டுவது ஹர்திக்கின் ஸ்டைல்.

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அந்த ஸ்டைலை மாற்றினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அணியின் 3-வது அல்லது நான்காவது பேட்ஸ்மேனாக களத்தில் குதித்தார்.

1992-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் கடைப்பிடித்த பாணி இது. இந்த தொடரில் பாகிஸ்தானின் 3-வது அல்லது நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இறங்கிய இம்ரான்கான், ஒருபக்கம் நங்கூரமடித்து நின்று மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட உற்சாகப்படுத்தினார். அதேபோல் ஹர்த்திக் பாண்டியாவும் இந்த தொடரில் அதிரடி காட்டி வருகிறார். அவரது வழிகாட்டலில் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

பலம்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இந்தச் சூழலில் குஜராத்தின் பெயரை தங்களுடன் கொண்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தங்களுக்கு சாதகமாக இல்லாத மும்பை ரசிகர்கள் மத்தியிலேயே வெற்றிகளைக் குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு,

இப்போது இறுதிப் போட்டியில் தங்கள் ஆதரவாளர்களைக் கொண்ட மைதானத்தில் ஆடுவது மிகப்பெரிய பலமாக இருக்கும்.

டி20 கிரிக்கெட்டுக்கு தேவை பவர் ஹிட்டிங் என்றால், அதில் ஹிட் அடிக்கும் அணியாக இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்தியாவின் அதிரடி பினிஷராகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியா, பழைய பார்முக்கு திரும்பி வந்துள்ள டேவிட் மில்லர், கடைசி ஓவர்களில் எத்தனை ரன்களை டார்கெட்டாக வைத்தாலும் அதை விரட்டிப் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்த திவாட்டியா ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்குக்கு பலம் சேர்க்கிறார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரை ஐபிஎல்லின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரஷித் கான், ரன்களையே கொடுக்காமல் எதிரணியின் குரல்வளையைப் பிடிக்கிறார். இவர்கள் நால்வரும் இதே ஆற்றலை இறுதிப் போட்டியில் காட்டினால் குஜராத் அணிக்கு வெற்றி நிச்சயம்.

பலவீனம்:

அதிரடி வீரர்கள் பலர் இருந்தபோதிலும், இன்னிங்ஸ்
முழுவதும் அணியின் பேட்டிங்கை ஒருங்கிணைத்துச் செல்லும் நிதானம் கொண்ட வீரர்கள் யாரும் இல்லாதது குஜராத் அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது. ஹர்த்திக் பாண்டியா ஓரளவு இந்த பணியைச் செய்தாலும் அவருக்கு மற்ற வீரர்களும் தோள் கொடுக்கவேண்டி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

2008-ம் ஆண்டில் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த ஷேன் வார்ன், சில வாரங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்தச் சூழலில் அவருக்கு சமர்ப்பணம் செய்வதற்காவது இந்த ஐபிஎல்லில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடி வருகிறது.

ஷேன் வார்னுக்காக அவர்களால் கோப்பையை வெல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பலம்:

இந்த ஆண்டில் ஷேன் வார்னுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஆடுகிறார்கள். இந்த லட்சியம் அவர்களுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த தொடரில் ராஜஸ்தானின் முதுகெலும்பு என்று ஜோஸ் பட்லரைச் சொல்லலாம். இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 4 சதங்களை விளாசியுள்ள ஜோஸ் பட்லர், 16 போட்டிகளில் 864 ரன்களைக் குவித்து பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

குறிப்பாக நேற்று நடந்த ப்ளே ஆஃப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் சதம் விளாசியதை மறக்க முடியாது.

பேட்டிங்குக்கு இணையாக ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சும் ராஜஸ்தான் அணிக்கு தோள் கொடுக்கிறது.

அஸ்வின், சஹல் ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்களும் அந்த அணியின் இரு கரங்களாக செயல்பட்டு விக்கெட்களை கொய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக 14 போட்டிகளில் 26 விக்கெட்களை வீழ்த்திய சஹல் இந்த ஐபிஎல்லில் சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். சஹல் – அஸ்வின் கூட்டணியின் 8 ஓவர்கள் நிச்சயம் எதிரணியை திணறடிக்கும்

பலவீனம்:

பேட்டிங்கைப் பொறுத்தவரை ஜோஸ் பட்லரை அதிகமாக சார்ந்திருப்பது ராஜஸ்தான் அணியின் பெரிய பலவீனம். அந்த ஆணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்காததும் பலவீனமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...