1986-ல் வெளிவந்த ‘டாப் கன்’ படத்தின் தொடர்ச்சியாக, ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டாப் கன் மெவெரிக்’ வெளியாகி இருக்கிறது. படம் தயாராகி இருந்தாலும், கோவிட் காரணமாக இப்படத்தை கொஞ்சம் தாமதாகவே வெளியிட்டு இருக்கிறது பாரமவுண்ட் பிக்சர்ஸ்.
அமெரிக்காவின் நட்புறவு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில், ஒரு யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை, எதிரி நாடு ஒன்று பனிமலை பள்ளத்தாக்கில் கட்டமைக்கிறது. [கடைசி வரை அது எந்த நாடு என்று படத்தில் குறிப்பிடவே இல்லை]. அந்த யுரேனியம் செறிவூட்டும் நிலையம் தனது செயல்பாட்டை தொடங்கிவிட்டால், அதன் பிறகு அமெரிக்காவில் இருப்பவர்கள் சாண்ட்விச்சை சாப்பிட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான். வேறெதுவும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி விடும்.
இப்படியொரு கடுமையான சூழலில், என்ன செய்வது என தெரியாமல் அமெரிக்க கப்பல் படை அதிகாரிகள் கொஞ்சம் யோசிக்கிறார்கள். கடைசியில் நீங்கள் தற்போது மனதிற்குள் யூகித்த அதையேதான் செய்கிறார்கள்.
டாம் க்ரூஸை ’டாப் கன்’ அமைப்பிற்கு வரவழைக்கிறார்கள். டாப் கன் என்பது அமெரிக்காவில் டாப் லெவல் பைலட்டுகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு கோச்சிங் சென்டர் என்பது போல் வைத்து கொள்ளலாம்.
டாப் கன்னில் மொத்தம் 12 பைலட்டுகள். அதில் 6 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும். அதுவும் போர் விமானம் ரேடாரில் சிக்காமல் பறக்க வேண்டும். 2 நிமிடம் 30 விநாடிகளுக்குள் இலக்கைத் தாக்க வேண்டுமென்ற என்று ஆக்ஷன் த்ரில்லருக்கான ஒரு கான்செப்டையும் முன் வைக்கிறார்கள்.
12 போர் விமானிகளில் எந்த ஆறு பேரை டாம் க்ரூஸ் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் ரேடாரில் சிக்கிக் கொள்ளாமல் பறக்கிறார்களா, இலக்கைத் தாக்கிவிட்டு நாடு திரும்புகிறார்களா என்பதை 131 நிமிடங்கள் பரபரப்புடன் காட்டினால் அதுவே டாப் கன் – மெவெரிக்.
30 வருடம் அனுபவம். வாங்காத மெடல்கள் இல்லை. தொடாத உச்சம் இல்லை. கேட்காத பாராட்டுகள் இல்லை. ஆனாலும் அட்மிரல் ஆகி இருக்கவேண்டியவர், தொடர்ந்து கெத்து கேப்டனாக பறந்து கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடித்திருக்கிறார்.
இந்த ஜூலை வந்தால் டாம் க்ரூஸூக்கு 60 வயதாகிறதாம். ஆளைப் பார்த்தால் இங்குள்ள கமர்ஷியல் ஹீரோக்களின் தம்பி போல இருக்கிறார்.
ஆக்ஷனில் உண்மையான ’பீஸ்ட்’ போல, அசத்துகிறார். ஒட்டுமொத்த படமும் டாம் க்ரூஸின் தயவில் பரபரக்கிறது.
ஜெனிஃபர் கான்லி, டாம் க்ரூஸின் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்பொழுதும் அழகாய் இருக்கிறார். ஜெனிஃபரின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஒரு ‘வாவ்’ சொல்லலாம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜெனிஃபர் கண்களைக் கவர்கிறார்.
டாம் க்ரூஸின் பழைய ப்ளைட் மேட் கூஸ் கதாபாத்திரத்தின் மகனான மில்ஸ் டெல்லருக்கும், டாம் க்ரூஸூக்கும் இடையிலான மோதல் பக்கா ’எமோஷனல்’.
டாம் க்ரூஸூம், ஜெனிஃபர் கான்லியும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நார்த்தன் ஐலண்ட்டில் இருக்கும் பாரில் சந்திக்கும் காட்சி இரண்டு நிமிட கவிதை.
டேட்டிங்கில் இருக்கும் போதே ஜெனிஃபரின் டீன் ஏஜ் மகள் வீட்டுக்கு வந்துவிடும் காட்சியில், மாடியில் இருந்து குதிக்கும் டாம் க்ரூஸ், அவரது மகள் முன் நிற்பது சைலண்ட் கலாட்டா.
ஐஸ்மேன்னாக நடித்திருக்கும் வால் கில்மர், டாம் க்ரூஸ் சந்திக்கும் காட்சியில் இயக்குநர் ஜோஸப் கொசின்ஸ்கி கைத்தட்டல் வாங்குகிறார். நிஜ வாழ்க்கையில், வால் கில்மருக்கு தொண்டையில் புற்றுநோய். அவரால் பேச முடியாது. அதையும் காட்சியோடு இணைத்து, படம்பிடித்திருப்பது கிளாஸிக்கல் டச்.
படம் ஆரம்பம் முதலே நம்மையும் கூடவே பறக்க வைக்கிற உணர்வு ஏற்படுகிறது. ஒரே பயிற்சிதான் ஒட்டுமொத்த படமே. ஆனாலும் சலிப்பு தட்டாமல், இங்கிலீஷ் படம்தானே என்று ரெஸ்ட் ரூமுக்கு போக வைக்காத அளவிற்கு அட்டகாசமாய் கொடுத்திருக்கிறார் ஜோஸப் கொசின்ஸ்கி.
படத்தில் இரண்டாம் உலகப் போரில் தூள்கிளப்பிய பி51 முஸ்டங் விமானத்தையும் காட்டுகிறார்கள். உண்மையில், டாம் க்ரூஸ் பயிற்சி பெற்ற பைலட் என்பது கூடுதல் தகவல்.
டாப் கன் – மெவெரிக், டாம் க்ரூஸின் பிறந்த நாள் பரிசு!