தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் இம்மாநிலங்களில் பதவி வகிக்கும் முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் சார்பாக சி வோட்டர் நிறுவனம், அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டில் 30 சதவீதம் பேர் முழு திருப்தியையும் 51 சதவீதம் பேர் சிலவற்றில் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மாநில முதலமைச்சராக மு.க. ஸ்டாலினின் செயல்பாடு குறித்து 41 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 44 சதவீதம் பேர் ஓரளவு மட்டுமே திருப்தியடைந்துள்ளதாகவும் 13 சதவீதம் பேர் முதலமைச்சராக ஸ்டாலினின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
மொத்தத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 81 சதவீத மக்கள் திருப்தியுடன் உள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 77.7 சதவீத ஆதரவுடன் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளதாகவும் மூன்றாம் இடத்தில் 72 சதவீத ஆதரவுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி 61 சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குவாட் மாநாடு: ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டை சென்றடைந்தார். மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆலோசகர் ஒசாமு சுஸுகி, NEC கார்ப்பரேஷனின் தலைவர் நோபுஹிரோ எண்டோ உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களை மோடி சந்தித்து பேசினார்.
இந்த பயணத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக ஜப்பான் நிறுவனங்களை சேர்ந்த 30 தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து நாளை நடைபெறும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில், இந்தோ – பசிபிக் பிராந்திய வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
நயன்தாரா- விக்னேஷ் – குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம்
தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை வழுத்தியூரில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்தனர். பத்திரிகை மற்றும் திருமணப் பொருட்களை வைத்து சாமி தரிசனம் செய்ய வந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் தொகுப்பாளர்கள் முகத்தை மூடியிருக்க வேண்டும்: ஆப்கனில் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர்களும் தொகுப்பாளர்களும் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும் என்ற உத்தரவை தலிபான்கள் கடந்த வாரம் பிறப்பித்தனர். இருந்தபோதிலும், இந்த உத்தரவை பெரும்பாலான பெண் செய்தி வாசிப்பாளர்கள் பின்பற்றாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு இணங்காத பெண்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஆப்கன் ஒழுக்க நெறிகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் செய்தி வாசிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் இன்று முகக்கவசம் அணிந்தபடியே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
இதுகுறித்து அங்குள்ள டோலோ நியூஸ் டிவியின் பெண் செய்தி வாசிப்பாளரான சோனியா நியாஸி கூறுகையில், “முகக்கவசம் அணிந்து செய்தி வாசிப்பதும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பெண்களை வீடுகளுக்குள் முடக்கவே இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் போபால் ஜாமியா மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக புது புகார்
உத்தரபிரதேசம் வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள கியான்வாபி மசூதி, இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்று எழுந்துள்ள சர்ச்சை இன்னும் முடியவில்லை. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலிலுள்ள, ஜாமியா மசூதி அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ம. பி மாநில உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவிடம் இந்து அமைப்பான சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின் சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் திவாரி மனு அளித்துள்ளார். இதில், மசூதியில் கள ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு போபால் முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜாமியா மசூதி, 19-ஆம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாபான குத்துஸியா பேகம் என்பவரால், 1832முதல் 1857-ஆம் ஆண்டிற்கு இடையே கட்டப்பட்டது.