சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை 100 ரூபாயை கடந்தது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் அதன் விலை ரூ.100-ஐ எட்டியது. ஒரு சில பகுதிகளில் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக இன்று 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்டுகிறது. தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை தொடரும். தேவையின் அடிப்படையில் நியாய விலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முன் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு
சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் சீன நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி சோதனை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை, சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மெரினாவில் காந்தி சிலை இடம் மாற்றம்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னை பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் நிறுத்தத்திற்கான நிலையம் காந்தி சிலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும்போது , மகாத்மா காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தடையில்லா சான்றிதழை தற்போது சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. காந்தி சிலையை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் முடியும் வரையில், மாற்று இடத்தில் வைக்க பொதுப்பணித்துறை பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக இடத்தை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இலங்கையில் ரனில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஏற்கெனவே பதவியேற்ற நிலையில் 4 புதிய அமைச்சர்கள் இன்று இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.