No menu items!

கவுதம் காம்பீர் – ஓரங்கட்டப்பட்ட ஹீரோ

கவுதம் காம்பீர் – ஓரங்கட்டப்பட்ட ஹீரோ

இந்திய கிரிக்கெட்டில் அதிகம் கொண்டாடப்படாத ஹீரோக்களில் ஒருவர் கவுதம் காம்பீர்.  2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையிலும், 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதற்காக தோனியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த 2 தொடர்களின் இறுதி ஆட்டத்திலும் இந்தியாவைக் கரைசேர்த்தவர் கவுதம் காம்பீர்.

2007 டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங், தோனி, சேவாக் போன்ற நட்சத்திரங்கள் சொதப்பியபோது காம்பீர் எடுத்த 75 ரன்களால்தான் இந்திய அணி 157 ரன்களை எடுத்தது. அதே விஷயம் 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்திலும் நடந்தது. இப்போட்டியில் 275 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்த, 31 ரன்களில் சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டை இந்தியா இழந்தது. இந்த சமயத்தில் 97 ரன்களைக் குவித்து கேப்டன் தோனிக்கு தோள்கொடுத்தார் காம்பீர்.

இப்படி 2 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற காரணமான காம்பீர், பின்னர் தோனியுடனான மோதல்களால் ஓரம்கட்டப்பட்டார்.

இருப்பினும் கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றார்.

இப்போது கிரிக்கெட்டில் காம்பீரின் இரண்டாவது இன்னிங்ஸ் நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள காம்பீர், நட்சத்திர வீரர்கள் இல்லாத அந்த அணியை புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார்.

லக்னோ அணியின் பயிற்சியாளரானதும் கவுதம் காம்பீர் முதலில் கவனம் செலுத்தியது அணித் தேர்வில்தான்.

பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் மீது காம்பீருக்கு அவ்வளவாக நாட்டமில்லை. அணியில் ஒரு வீரராக இணைந்து செயல்படுபவர்களை வாங்க வேண்டும் என்பது அவரது கருத்து. அதற்கு ஏற்றார்போல் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக், குருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர், மணிஷ் பாண்டே, பதோனி, அவீஷ் கான், மனன் வோரா போன்ற நடுத்தர வீரர்களை அணிக்கு தேர்ந்தெடுத்தார். இவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் கிடையாது. 

இப்படிப்பட்ட வீரர்கள்தான் தனக்கு கட்டுப்படுவார்கள் என்பதால் அவர்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினார் காம்பீர். இதுபற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் காம்பீர், “வெற்றிக்கான பணிகளில் முக்கால்வாசி வீரர்களை ஏலம் எடுப்பதிலேயே முடிந்துவிடும்.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து நட்சத்திர வீரர்களை வாங்குவதைவிட, அணிக்கு தேவையான வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

அந்த இந்த ஏலத்தில் நாங்கள் அதில்தான் கவனம் செலுத்தினோம். சரியான அணி அமைந்ததும் எங்கள் பணி பாதி முடிந்தது” என்கிறார்.

அடுத்ததாக பயிற்சி. இதில் வீரர்களுக்கு காம்பீர் சொன்ன முதல் விஷயம் எதிராளிக்கு அடிபணிந்துவிடக்கூடாது என்பதுதான். அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும், அதைப் பார்த்து மற்ற வீரர்கள் கவலைப்படக்கூடாது. அணியை தங்களால் கரைசேர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றார் காம்பீர். இதற்கு உதராணமாக 2 உலகக் கோப்பை போட்டிகளில் தான் ஆடியதையே எடுத்துக் கூறினார். அடுத்ததாக எந்தக் கணத்திலும் போராட்ட குணத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது என்றார்.

காம்பீரின் லக்னோ அணியில் அடுத்தது பேட்டிங் ஆர்டர் மாறிக்கொண்டே இருந்தது.

எந்த வீரரும் எந்தக் கணத்திலும் ஆடக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பது அவரது கருத்து. இதனால் கே.எல்.ராகுல் – டி காக் தொடக்க ஜோடியைத் தவிர அவர்களின் மற்ற பேட்ஸ்ன்களின் வரிசை மாறிக்கொண்டே இருந்தது. இதனால் எதிரணிகளால் எளிதில் கணிக்க முடியாத அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாறிப்போனது.

 ஆனால் காம்பீரின் இந்த கணக்குகளையும் மீறி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் படுதோல்வி அடைந்தது லக்னோ. இதை காம்பீரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போட்டி முடிந்ததும் வீரர்கள் அனைவரையும் நிற்கவைத்து ஒரு சிற்றுரை ஆற்றினார் காம்பீர். 1983-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்ததில் அணி வீரர்களிடம் கபில்தேவ் ஆற்றிய உரைக்கு நிகரானது அந்த உரை.

 “ஒரு அணி தோற்பது பெரிய விஷயமில்லை. போட்டி என்றால் ஒரு அணி தோற்பதும், மற்றொரு அணி ஜெயிப்பதும் சகஜம்.

ஆனால் ஆட்டத்தின் பாதியிலேயே நாம் தோற்றுவிட்டோம் என்ற மனநிலைக்கு ஒரு அணி வருவதுதான் தவறு.

இன்றைய போட்டியில் நாம் அப்படி விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், ஆட்டத்தின் பாதியிலேயே மனதளவில் தோற்றுவிட்டதாகவும் கருதுகிறேன். நாம் பலவீனமாக இருந்துவிட்டோம். இதுபோன்ற ஒரு தொடரில் பலவீனத்துக்கு இடமில்லை. பலமான பல அனிகளை நாம் இந்த தொடரில் ஜெயித்திருக்கிறோம்.

ஆனால் அப்போட்டிகளில் காட்டிய போராட்ட குணத்தை இன்று நாம் விட்டுவிட்டோம். எதிரணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற தொடர்களில் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் அந்த உரையின் சாராம்சம்.

லக்னோ அணியின் வீரர்களை வீறுகொண்டு எழவைத்தது அந்த உரை. அதன் பிரதிபலிப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட லக்னோ அணி, இந்த ஐபிஎல்லின் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது லக்னோ. ஆனால் இதெல்லாம் காம்பீரை திருப்திப்படுத்தாது.

அவரது ஒரே லட்சியம் ஐபிஎல் கோப்பை. அதை அடையும்வரை அவர் தூங்கமாட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...