No menu items!

நியூஸ் அப்டேட்: காஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு

நியூஸ் அப்டேட்: காஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு

சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி  சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று  ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு சார்பில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி இன்று தொடங்கியது.  இந்த கண்காட்சியை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  அவினாசி சாலையில் உள்ள  தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் பேசும்போது, “கோவை மாவட்டத்திற்கும் மேற்கு மண்டலத்தின் முன்னேற்றதிற்கும் கோவை விமான நிலையம் முக்கியமான ஒன்றாகும். கோவை விமான நிலையத்தை உலகத் தரத்தில் உயர்த்தும் பணியை கலைஞர் துவங்கி வைத்தார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1,132 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தபடும்” என்றார்.

இந்திய எல்லையில் 2-வது பாலத்தைக் கட்டும் சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள சா்ச்சைக்குரிய பான்காங் ஏரி அருகே இரண்டாவது பாலத்தை சீனா கட்டிவருவது செயற்கைக்கோள் புகைப்படம் முலம் உறுதியாகி உள்ளது. இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. சீன ராணுவத்தினா் விரைவாக முன்னேறும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பெரிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. இதனை செயற்கைக்கோள் புகைப்படம் உறுதிப்படுத்தி உள்ளது. பாலத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.  செயற்கைக்கோள் புகைப்படத்தையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

கியான்வாபி மசூதி சர்ச்சை –  நீதிமன்றத்தில்  ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது.

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரி, வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து, ஆகஸ்ட் 18, 2012-ம் ஆண்டு வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகரின் உத்தரவின்படி கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது. 3 நாட்கள் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது.

சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம் – அரசாணை வெளியீடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து தடைவிதித்தனர். இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி `சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என். ராதா என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் `பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கோவிட் 19 தற்போதைய நிலை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்யவும்’ என உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடலூர் ஆட்சியரால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனடைப்படையில் கனகசபை மண்டபத்தின் மீதேறி சபாநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...