தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகின் மிகத்தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியமிக்கது. கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும். தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன்” என்றார்.
பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கேற்றவாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்பீடு செய்து கட்டண உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து அளித்து இருக்கிறார்கள். அது தயார் நிலையில் உள்ளது. அதனைக் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பலர் சொல்கிறார்கள். கட்டண உயர்வு குறித்து முதல்வர் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கவில்லை” என்றார்.
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு
இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அந்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாடு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியா – நேபாளம் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு கூட்டுறவில் புதிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கலாச்சாரம் மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்புக்கான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுஷீல்சந்திராவின் பதவிக் காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. பணியில் இருந்து சுஷீ்ல் சந்திரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலம் முடிந்ததையடுத்து, தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளது..