No menu items!

கோதுமை ஏற்றுமதி தடை  –  கலக்கத்தில் விவசாயிகள்

கோதுமை ஏற்றுமதி தடை  –  கலக்கத்தில் விவசாயிகள்

2021 ஆக்ஸ்ட் 8… காணொளி மூலம் விவசாயிகளுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் ஏற்றுமதியில் உலகளவில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். அந்த அறிவிப்புக்கு ஒரு வயதுகூட ஆகவில்லை. அதற்குள் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது மத்திய அரசு. இதனால் ஜி7 நாடுகளின் கடும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது இந்தியா.

“உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை அளிக்க இந்தியா தயாராக இருக்கிறது” என்று சமீபத்தில்கூட ஐரோப்பிய பயணத்தில் பிரதமர் மோடி சொல்லியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு திடீரென தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க என்ன காரணம்?

உலகளவில், முக்கிய உணவு பயிராக கோதுமையே உள்ளது. கோதுமை, அரிசி மற்றும் சோளத்தைவிட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது இதற்குக் காரணம். உலகின் கோதுமை தேவைக்கு ஏற்றுமதி செய்த முதல் 5 நாடுகளாக ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், உக்ரேன் ஆகியவை உள்ளன. இதில் ரஷ்யாவும் உக்ரேனும் மட்டும் 30 சதவிகிதம் வரை ஏற்றுமதியை செய்து வந்தன. இது இப்போது உக்ரைன் – ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக உக்ரைனால் கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை என்றால், பொருளாதார தடைகளால் ரஷ்யாவிடம் இருந்து கோதுமை வாங்க முடியாத நிலை பல நாடுகளுக்கு. குறிப்பாக ரஷியா, உக்ரைன் கோதுமையை நம்பியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய இந்தியா, உலகின் தேவைக்கு ஏற்ப கோதுமை உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க திட்டமிட்டது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி சில வாரங்களில் இது தொடர்பாக கோதுமை ஏற்றுமதியாளர்களிடம் பேசிய மோடி, “உக்ரைன், ரஷ்யா நாடுகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து வரும் நாடுகளுக்கு நமது கோதுமையை ஏற்றுமதி செய்வது பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் யோசிக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து மத்திய அரசும் இதில் கவனம் செலுத்தியது. கோதுமை ஏற்றுமதி தொடர்பாக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 8 நாடுகளுடன் ஆலோசனை நடத்த பிரதிநிதிகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதனையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி அதிகரித்தது. சென்ற மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக உயர்ந்தது. இது தொடர்பாக, “இந்தியாவின் விவசாயிகள் உலகத்துக்கு உணவளிக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்”என்று சமீபத்திய ஐரோப்பிய நாடுகள் பயணத்தின் போதுகூட மோடி பெருமிதத்துடன் கூறினார்.

அதேநேரம் எதிர்பாராத வகையில், கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக உள்நாட்டில்  கோதுமை விலை உயர தொடங்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு, சில்லறை சந்தையில் கோதுமை மாவின் சராசரி விலை குவின்டாலுக்கு 2880 ரூபாயாக இருந்தது தற்போது ரூ. 3291 ஆக உள்ளது.  சில்லறை சந்தையில் கிலோ கோதுமை ரூ. 32.91 என்ற விலையை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் கிலோ 49 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றமாகும். கோதுமையின் இந்த விலையேற்றத்தால் பேக்கரி ரொட்டி உட்பட கோதுமை சார்ந்த உணவுப் பண்டங்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இதற்கு கோதுமை விளைச்சல் குறைந்ததும் ஒரு காரணம்.

இந்தியாவில் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில்தான் கோதுமை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடை செய்யப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியதால் கோதுமை விளைச்சல் 5 சதவிகிதம் குறைந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த முறை மகசூல் 15-25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கோதுமை விலையை மறைமுகமாக உயர்த்த காரணமாகியுள்ளது.

உலக சந்தையின் கோதுமை விலை உயர்வை பார்க்கும்போது, கோதுமை விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுவதால், சில வியாபாரிகள் மொத்த இருப்பையும் வெளியே எடுக்கவில்லை. இதுவும் விலை உயர்வுக்கு காரணம்.

பொது விநியோகத்துக்காக மத்திய அரசுக்கு ஆண்டிற்கு 480 லட்சம் டன் கோதுமை தேவைப்படும். ஆனால், தற்போது அரசிடம் மொத்தம் 380 லட்சம் டன் கோதுமை மட்டுமே உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், 100 லட்சம் டன் பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் உள்நாட்டில் கோதுமை, கோதுமை பொருட்கள் விலை உயர்வதையும் பதுக்கலையும் தடுக்க ஏற்றுமதி தடை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜி7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “இப்படி ஒவ்வொரு நாடும் ஏற்றுமதியை நிறுத்தினால் உலக சந்தை ஸ்தம்பித்துவிடும்” என இந்தியாவுக்கு ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அடுத்தமாதம் ஜி7 மாநாடு நடக்க உள்ளதால் இந்தியாவுக்கு இது ஒரு புதிய சிக்கலாகவும் உருவெடுத்துள்ளது.

உலக நாடுகளிடம் மட்டுமல்ல உள்நாட்டிலும் கோதுமை ஏற்றுமதி தடைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்நாட்டின் கோதுமை தேவையை நிறைவு செய்ய இந்த தடை அவசியம்தான் என்று சொல்லப்பட்டாலும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அதாவது, சர்வதேச சந்தை விலை உயர்வால், கொள்முதல் விலை அதிகரித்து, தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற கனவுடன் இருந்த விவசாயிகளுக்கு இந்த தடை ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இந்த நிலைக்கு காரணம். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இந்த தடை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இதனால், சர்வதேச சந்தை விலை உயர்வின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...