இலங்கையில் அகிம்சை வழியில் நடந்துவந்த ‘கோட்டா வீட்டுக்கு போ’ (கோட்டா கோ கம) போரட்டம் வன்முறை போராட்டமாக உருமாறியிருக்கிறது. பிரதமர், அமைச்சர், எம்.பி.கள் வீடுகளுக்கு தீ வைப்பு, துப்பாக்கி சூடு, கொலை என மக்கள் கோபம் கட்டுக்கடங்காமல் வெடித்திருக்கிறது. ராஜபக்சேகள் உட்பட அவர்களது குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ரகசிய இடங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான, அதிபர் கோத்தபய பதவி விலகல் இதுவரை நடக்கவில்லை. மக்கள் கோரிக்கையை ஏற்று அவர் பதவி விலகுவாரா அல்லது அவரது பதவி பறிக்கப்படுமா?
இலங்கை முன்னாள் எம்.பி. ம. திலகராஜாவிடம் கேட்டோம். ‘விரைவில் கோத்தபய பதவி பறிப்பு’ நிகழும் என்று உறுதியாக சொல்கிறார் திலகராஜா.
தொடர்ந்து பேசிய அவர், “போராட்டம் தொடங்கி சரியாக நாற்பது நாட்கள் ஆகிறது. மார்ச் 31-ம் தேதி கோத்தபய இல்லம் முன்பு இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதோடு இந்த போராட்டம் தொடங்கியது. அன்றைய தினமே போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பிரயோகித்தும் போராட்டக்காரர்களை கைது செய்தும் போராட்டத்தை ஒடுக்கிவிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனால் அதன்பின்னர் போராட்டம் மேலும் வலுப்பெறத்தான் செய்தது.
பெட்ரோலுக்காக, டீசலுக்காக, பால்மாவுக்காக வரிசையில் நின்று சுமை தாங்க முடியாமல்தான் மக்கள் இந்த போராட்டத்தில் இறங்கினார்கள். அதன் நியாயத்தன்மையை உணர்ந்த வழக்கறிஞர்கள் சங்கம், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காட முன்வந்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களின் வரவு போராட்டக்காரர்களுக்கு பெரிய சக்தியை கொடுத்தது.
அதன்பின்னர் அதிபர் மாளிகை முன்பாகவும் பிரதமர் இல்லம் முன்பாகவும் என்று பரவி, தொடர்ந்து ‘கோட்டா கோ கம’ கோஷத்தை முன்வைத்து இலங்கை முழுவதும் போராட்டம் விரிவடைந்தது.
இந்த நாற்பது நாட்களில், முதலில், ராஜபக்சேக்கள் ஆதரவாளரான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி நீக்கப்பட்டு துறை சார்ந்த நிபுணர் உள்ளே கொண்டுவரப்பட்டார்.
இரண்டாவதாக, அடுத்த சில நாட்களில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. அடுத்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டாலும் அதில் இடம்பெற்றிருந்த பசில் ராஜபக்சே, சசீந்திர ராஜபக்ச, சமல் ராஜபக்சே, நாமல் ராஜபக்சே ஆகிய நான்கு ராஜபகசேக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
மூன்றாவது, ராஜபக்சேகளால் அவர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட 20-வது சட்ட திருத்தத்தை மாற்ற 21-வது சட்ட திருத்தம் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, நான்காவதாக, போராட்டத்தின் பெரிய வெற்றியாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவில் இருந்து விலகினார்.
‘கோட்டா கோ கம’ என்ற ஒரு வரி கோஷத்தின் பின்னணியில் இந்த நான்கு வெற்றிகளும் நாற்பது நாட்களில் அடையப்பட்டிருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், அதிபர் என்ற அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்தவர்களை இந்த ஒற்றை வரி கோஷம் நாற்பதே நாட்களில் ஆட்டி அசைத்திருப்பதே பெரிய வெற்றிதான். இப்போது போராட்டக்களத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இலக்கு, கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றுவதுதான்.
பாராளுமன்றத்தில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது போதாது அவருக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட்’ தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. அதற்கு ஏதுவான பல காரணங்கள் உள்ளன. தேசத் துரோக குற்றம்கூட அவர் மீது செலுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதி மோசடிகள் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அவருக்கு எதிராக ‘இம்பீச்மெண்ட்’ தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அவருக்கு ஆதரவான எம்பிகளே தற்போது எதிராக வாக்களிக்கக்கூடிய சூழல்தான் தற்போது உள்ளது. எனவே, கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றார் உறுதியுடன்.