No menu items!

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு படைகளை அனுப்பமாட்டோம் – இந்தியா

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு படைகளை அனுப்பமாட்டோம் – இந்தியா

இலங்கையில், நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா படைகளை அனுப்பலாம் என்று இலங்கை ஊடகங்களில் இன்று செய்தி வெளியானது. இதனையடுத்து இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை  இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இத்தகைய  தகவல்கள் இந்தியாவின் நிலைப்பாடு  கிடையாது.  இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சே திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: பாதுகாப்பு செயலாளர் தகவல்

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்,” என்றும் தெரிவித்தார். மேலும், “கடந்த இரண்டு நாள்களாக நடந்து வரும் வன்முறையில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. 136 வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன” என்று கூறினார்.

அசானி புயல்: தமிழகம், புதுவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

‘அசானி’ புயல் காரணமாக, தமிழகத்தில் இன்று (மே 11) வட தமிழகம் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (வியாழக்கிழமை) நாளையும் நாளை மறுநாளும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்ட பின்னர் மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக மாணவர்கள் விலகுவதை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் வீட்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன் வாயிலாகவோ அல்லது மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவோ அல்லது தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்பெசிபிக்கேஷன் மையங்களை ஏற்படுத்தியோ மேற்கொள்வதற்காக ஆலோசித்து கொண்டு இருக்கிறோம். முதலமைச்சர் அறிவித்த உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்”, என்றார்.

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு நிற திட்டுகளை ஏற்படுத்துகிறது. இதனையடுத்து, தமிழக – கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனைச் சாவடியில் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் வருகின்றனரா என கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, சுகாதாரத் துறையினர் கூறும்போது, “கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. தோலில் ஏதேனும் திட்டுகள் உள்ளனவா என்பது குறித்தும் கேட்கப்படுகிறது. மேலும், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தெரிவிக்க 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு இந்த காய்ச்சல் அபாயகரமானது அல்ல. தானே சரியாகிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், இது வேகமாக பரவக் கூடியது” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...