இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதனால் வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாதத் தவணை அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எப்படி?
வீடு கட்ட, வாகனம் வாங்க, தொழில் முதலீட்டுக்காக என சாமானிய மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இன்னொரு பகுதி மக்கள் வங்கி தரும் வட்டிக்காக பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். இப்படி மக்கள் டெபாசிட் செய்யும் பணம் மற்றும் வங்கியின் கையிருப்பு ஆகியவற்றில் இருந்துதான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன.
இதில் பற்றாக்குறை வரும்போது வங்கிகள் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியிடம் வைத்து, குறுகிய கால மற்றும் நீண்ட காலக் கடன்களை பெறுகின்றன.
இப்படி பெறப்படும் குறுகிய காலக் கடன்களுக்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டியே, ரெப்போ வட்டி. (நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி, பேங்க் வட்டி.)
இது சாமானிய மக்களை எப்படி பாதிக்கும்?
இப்போது, ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால், தாங்கள் பெற்றிருந்த குறுகிய கால கடன்களுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் இந்த இழப்பீட்டை சரிகட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும். இதுபோல் ரெப்போ வட்டி குறையும்போதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும்.
கடைசியாக 2020 மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோது வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வீட்டுக்கடன், வாகன கடன், விவசாயக் கடன், தனிநபர் கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வாகன கடன் பெற்றுள்ளவர்கள் செலுத்தும் மாதத் தவணை அதிகரிக்கும்.
அதேநேரம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டும் டெபாசிட்டுக்கான வட்டி அதிகரிக்கும். எனவே, டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு இதனால் லாபம்தான். மேலும், இந்த அறிவிப்பால் தங்கம் விலை இறங்கும் என்றும், பங்குச் சந்தையில் இது பாதிப்பை ஏற்படுத்தும், பங்குச் சந்தை முதலீடுகள் குறையலாம் என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.