வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தில் 4.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைப்பு: முதல்வர் தகவல்
நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் 1- 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் வெயிலின் தாக்கம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விவகாரத்தில் மே 10-க்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மே 10ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‛மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லையென்று மத்திய அரசு சொன்னால், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்’ என கூறினர்.
மேலும் “மத்திய அரசு வரும் 10-ம் தேதிக்குள் இவ்விஷயத்தில் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தனர்.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 170 நாடுகள் முன்பதிவு அமைச்சர் மெய்யநாதன் தகவல்
சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை 170-க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ““ஜூலை மாதம் 28-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை 170-க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன. இன்னும் பல நாடுகள் இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.