No menu items!

ஷவர்மா ஆபத்தா?

ஷவர்மா ஆபத்தா?

இளைய தலைமுறையில் ஈசி உணவாக ஷவர்மா மாறிவிட்டது. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஷவர்மா கடையைப் பார்க்க முடிகிறது.

ஒரு நீண்ட கம்பியில்  கூம்பு வடிவில் பதப்படுத்தப்பட்ட சிக்கன் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பின்புறம் நெருப்பு. அந்த சூட்டில் சிக்கன் வேக, கேட்பவர்களுக்கு அங்கிருந்து சிக்கன் சுரண்டி எடுத்து அதனுடன் கொஞ்சம் மையோனைஸ், கொஞ்சம் கோஸ், கொஞ்சம் தக்காளி என கலந்து கொத்தி சப்பாத்தி போன்ற குபூஸில் வைத்து சுருட்டித் தருகிறார்கள். வாய்க்குள் ருசியாக போகிறது. இதையே 2 குபூஸ்களின் நடுவில் சிக்கன் கலவையை நிரவித் தருவதை பிளேட் ஷவர்மா என்கிறார்கள்.

மெக்சிகன் ஷவர்மா என்று அதில் காரத்தை கலந்து தருகிறார்கள்.

ஷவர்மாவின் துவக்கம் துருக்கி அங்கிருந்து பெய்ரூட், மெக்சிகோ என்று பரவி இப்போது தமிழ் நாடு வீதிகளில் மூலைக்கு மூலை இருக்கிறது.

இந்த ஷவர்மா உடலுக்கு நல்லதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் இறந்திருக்கிறார்.

“ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் சிக்கனை ஒருசில கடைகளில் நன்றாக வேகவைப்பதில்லை. அது மட்டுமில்லாமல் சில கடைகளில் முதல் நாள் விற்பனையாகாத சிக்கன் கறியை அப்படியே ஃப்ரீசரில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துகிறார்கள்.  இதனால் அவை ஜீரணமாவதில் பிரச்சினைகள் ஏற்படும்” என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.  

ஷவர்மாவை தொடர்ந்து சாப்பிடும் இளம் பருவத்தினரின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகளும் இதனால் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நடந்த ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் இறப்புக்கு என்ன காரணம்?

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஷவர்மா தயாரிக்க பயன்படுத்தப்படும் சிக்கன், பல கடைகளில் சரியாக வேகவைக்கப்படுவதில்லை.

இந்த சூழலில் அவற்றை தயாரிக்க, முழுக்க முழுக்க தரமான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

ஷவர்மா கடைகளில் சுகாதார விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இறப்புக்கு காரணம் சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாதான் என்று கூறப்படுகிறது.

ஷவர்மா சாப்பிடுங்கள். நிறைய விற்பனையாகும் கடைகளில் சாப்பிடுங்கள். அவர்களிடம் பழையது இருக்காது.

சுத்தமான கடைகளில் சாப்பிடுங்கள். அங்கே சுகாதார சிக்கல் இருக்காது

குறைவாக சாப்பிடுங்கள். உங்கள் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...