No menu items!

நியூஸ் அப்டேட்: மே மாதம் வெப்பநிலை குறையும்!

நியூஸ் அப்டேட்: மே மாதம் வெப்பநிலை குறையும்!

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆறுதலளிக்கும் செய்தியாக மே மாதத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தமிழ்நாட்டில் கணினியின் தரவுகளை வைத்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கடலோரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு காற்றின் திசைவேகம் கடலிலிருந்து வீசினால் வெப்பநிலை குறைவாக இருக்கும். தரைக்காற்று வீசினால் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். காலை 10 மணிவரையிலும், அதன் பின்பு மாலை 3 மணிக்கு பிறகும் வெளியே செல்வது நல்லது. இடைப்பட்ட அந்த நேரங்களில் சூரிய கதிர்கள் நேரடியாக தாக்கும். அதனால் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

உக்ரைன் போர் – யாருக்கும் வெற்றி கிடைக்காது: மோடி பேச்சு

இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி பெர்லினில் சுமார் 2,000 இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, “ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது. அனைவருமே இழப்பை சந்திப்பார்கள் என்பதே எங்கள் கருத்து. இந்தியா அமைதியையே விரும்புகிறது. இந்த விரும்பத்தகதாக நிகழ்வுகளால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு குடும்பமும் வலியை உணருகிறார்கள். ஏழை மக்கள் மற்றும் வளரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” என்று மோடி கூறினார்.

ரமலான் கொண்டாட்டத்தில் மோதல்: ஜோத்பூரில் இணைய சேவைகள் நிறுத்தம்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் இணையதள சேவையை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை, அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் உட்பட எந்தப் பொருள் வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் இந்த நாளில் தங்கத்தின் விலை உயர்வை நோக்கியே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அட்சய திருதியை நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 4,816 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 38,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 67 ரூபாயாக உள்ளது. இன்று தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகின்றது.

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகரிஷி சரக் சபத் உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளை பார்க்கும் போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இது போன்ற உறுதிமொழி ஏற்கனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது. எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதைக் கருத்தில்கொண்டு, மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...