இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை. தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும். எனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதி : ஓபிஎஸ் அறிவிப்பு
இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது சொந்த நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தேவையான உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதல்வர் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானம் மனிதநேயத்தின் அடிப்படையாக, தமிழர்கள் மனித நேய உலகில் உயர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இலங்கைக்கு நிவாரண உதவியாக நான் சார்ந்த குடும்பம் சார்பாக, 50 லட்சம் நிதியை அளிக்கிறேன்” என்றார்.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு
தமிழகத்தில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
வெயில்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வீடுகளில் தொடர்ந்து மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. . இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் தமிழகத்தில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4,308 காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப்பட உள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று சட்டசசபையில் வெளியிடப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், “4,308 காலிப் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பணியாளர்களை நடப்பாண்டில் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறத” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டம்: திக அறிவிப்பு
திராவிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: ‘தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து நாளை (ஏப்.30) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.