No menu items!

நியூஸ் அப்டேட்: ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு அநீதி – கமல்ஹாசன்

நியூஸ் அப்டேட்: ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு அநீதி – கமல்ஹாசன்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே துறையில் காலியாக உள்ள, நிலைய அதிகாரி உள்ளிட்ட 24,649 பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு வரும் மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் நிறைய பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் தமிழகத் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பொருளாதாரத்தில் நலிவடைந்த தேர்வர்களின் கனவான இந்தத் தேர்வை, சாமானிய மக்களை எழுதச் செய்யவிடாமல் தடுக்கும் சதியோ இது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தில் மிகச் சிறந்த தேர்வு மையங்கள் இருக்கும் சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்குத் தேவையின்றி வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தமிழக தேர்வர்களைப் பந்தாடும் நடவடிக்கைகளை மத்திய அரசு இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடியை விமர்சித்த பாக். பிரதமருக்கு இந்தியா கண்டனம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விமர்சித்திருந்தார். இந்தப் பயணமே ஒரு நாடகம் போல் அரங்கேற்றப்பட்டது என்று அவர் கூறியிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ” இந்திய விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மாரிதாஸ் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது, தமிழ்நாடு குறித்து தவறுதலாக ட்விட் செய்ததாக மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த ட்விட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு எதிரான இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசி உள்ளார் என்று கூறி மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கொரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்திருக்கும் நிலையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுமா, அல்லது கடந்த 2 ஆண்டுகளைப் போல அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

துரை வைகோ நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் 3 பேர் மதிமுகவில் இருந்து நீக்கம்: வைகோ நடவடிக்கை

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை மதிமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ம.தி.மு.க. கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட இருந்த தமிழர் தண்டனை நிறுத்தி வைப்பு

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையா, தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒத்திவைக்க அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 44.95 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் 36 வயது தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...