ஒரு சில படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் பாடல்கள் ரசிகர்களிடையே தீயாய் பரவும். ‘அயலான் படத்தின் ‘நீ உசரம் தொட்டாலே’ பாடல் அந்த வகை. முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையில், அவரது குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. இதனாலேயே இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டைம் டிராவலை மையமாக வைத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.
வேற்றுகிரகவாசிகளையும் மனிதனையும் இணைத்து 2016-ம் ஆண்டிலேயே ”அயலான்” படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினார் ரவிக்குமார்.
திரைக்கதை சவாலாக இருந்ததால் எழுத்தாளர் அஜயன் பாலாவையும் துணைக்கு வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
கதையின் நாயகனாக சிவகார்த்திகேயனாக இருந்தாலும், படத்தின் பல காட்சிகள் வேற்றுகிரகவாசியை மையப்படுத்தி இருப்பதால் அதை எடுப்பது படக்குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.
அதனாலேயே 2019-ம் ஆண்டு படப்பிடிப்பு முடிவடைந்தாலும் அதன் கிராஃபிக்ஸ் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இடையில் கொரோனா கட்டுப்பாடுகளும் வந்ததால் படத்தின் பணிகள் மேலும் தாமதமாகின.
முக்கியமாக 3500 ஷாட்டுகளுக்கான CG (computer graphics) தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வர மெனக்கெடல்கள் அதிகமாக இருப்பதாக படக்குழு கூறுகிறது. இத்தனை உழைப்பு இருப்பதால் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய படமாக ”அயலான்” இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அயலான் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.