‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ என்று இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் சில ஆண்டுகளிலேயே வெளியாகிவிட்டன. அவை வெற்றியும் பெற்றன. ஆனால் அந்தப் படங்களுக்கெல்லாம் முன்பாக சுமார் 13 வருடங்களுக்கு முன் வெளியாகி உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்த ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் வெளியாகாமல் இருந்தது. அது எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது.
2014-ம் ஆண்டிலேயே ‘அவதார் 2’ – Avatar 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் சில காரணங்களால் அப்போது அது தள்ளிப்போனது.
2017-ல்தான் அவரால் படத்தை தொடங்க முடிந்தது. இந்நிலையில், ‘அவதார் 2’ படத்துடன் சேர்ந்தே அதன் மூன்றாம் பாகத்தையும் இயக்கி வந்தார். அவதார் 3 படத்திற்கான படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 95% நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் இந்த படத்தின் வெளியீடு இன்னும் தள்ளிபோகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் CinemaCon என்னும் உலகத் திரைப்பட நிகழ்வில் இன்று ‘அவதார் 2’ படத்தின் சில காட்சிகளை வெளியிட்டு அதன் முதல்கட்ட பிரமோஷனைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
மேலும் ‘அவதார் 2’ படத்துக்காக உலகம் முழுவதும் ஒரு லட்சம் திரையரங்குகளில் 3D, High Framing போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2022 டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத்தொடர்ந்து 2028-ம் ஆண்டுக்குள் அவதார் படத்தின் 5 பாகங்களை வெளியிட ஜேம்ஸ் காமரூன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் ‘அவதார் 2’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்படியோ நாம் பார்க்க விரும்பிய அவதார் மாயலோகத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகப் போகிறது. அதை வரவேற்க தயாராவோம்.