கிரிக்கெட் பரமபதத்தில் உச்சியை நோக்கி சரசரவென்று ஏறிக்கொண்டிருந்தவர் விராட் கோலி. 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த நாள் முதல் சச்சினுக்கு அடுத்த கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்பட்டவர் கோலி.
2011 முதல் 2018 வரை விராட் கோலியின் பேட் செய்த சாகசத்தால் பல சாதனைகள் உருண்டன. மிக முக்கியமாக 468 இன்னிங்ஸ்களில் 70 சதங்களை விராட் கோலி எட்ட, 100 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை கோலி எளிதில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 70-வது சதத்துக்கு பிறகு கடந்த 102 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு சதத்தைக்கூட அடிக்கவில்லை. 71 சதங்களை அடித்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையைக்கூட அவர் முறியடிக்கவில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
சதம் போகட்டும்… சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு அரைசதம் எடுக்கவே நொண்டியடிக்கிறார் விராட் கோலி.
உலகின் நம்பர் 1 வீரராக இருந்த கோலியின் வீழ்ச்சியால் இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பும் பலவீனமாகிக் கிடக்கிறது. ‘கோலிக்கு என்ன ஆச்சு’ என்பதுதான் இப்போது கிரிக்கெட் உலகின் பேச்சாக இருக்கிறது.
விராட் கோலியின் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களைப் பார்ப்போம்:
1.ஓவர் அதிரடி களத்தில் உதவாது
கோலி மட்டுமல்ல கவாஸ்கர், ராகுல் திராவிட், சச்சின் என பலருக்கும் இதுபோன்ற ஒரு வீழ்ச்சி சில காலகட்டங்களில் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவர்கள் மைதானத்தில் நிதானத்தைக் கடைபிடித்துள்ளனர். அந்த பொறுமை அவர்களை மீட்டெடுத்தது. ஆனால் கோலியைப் பொறுத்தவரை அவருக்கு பொறுமையாக ஆடும் ஆட்டம் வராது.
எப்போதும் அதிரடியாகவே ஆடவேண்டும் என்று விரும்புகிறார். இந்த மனநிலைதான் அவரது ஆட்டத்தை பாதிக்கிறது.
நீண்டநேரம் ஆடவேண்டுமே என்ற எண்ணத்தைவிட ஆக்ரோஷமாக ஆடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படுவதால் நல்ல பந்துகளைக்கூட மதிக்காமல் தூக்கி அடிக்கிறார். விராட்டின் வீழ்ச்சிக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.
2. ஆத்திரத்தில் அடிக்கும் ஷாட்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மஹேந்திரசிங் தோனிக்கு ஒரு குணம் உண்டு. மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளர் தன்னை கோபப்படுத்தினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். பதிலுக்கு அவரது அடுத்த பந்தையே சிக்சருக்கு விரட்ட வேண்டும் என்று பொங்கமாட்டார். மாறாக தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்வார். பொறுமையாக காத்திருப்பார்.
தக்க சமயம் வரும்போது, அந்த பந்துவீச்சாளர் மோசமான பந்தை வீசும்போது அதை சிக்சருக்கு விரட்டி, அவரைப் பார்த்து ஒரு மென் சிரிப்பு சிரிப்பார்.
ஆனால் கோலி அதற்கு நேர் எதிரானவர், யாராவது தன்னை உசுப்பேற்றினால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அடுத்த பந்திலேயே அந்த பந்துவீச்சாளரை தண்டிக்க நினைப்பார். சில சமயங்களில் அந்த எண்ணத்தை அவரால் சரியாக நிறைவேற்ற முடியும். ஆனால் பல சமயங்களில் அது தவறான ஷாட்டாகி அவரது விக்கெட்டை பதம் பார்த்துள்ளது. கோலியின் சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
3.தொடர்ச்சியான பணிச்சுமை:
விராட் கோலியின் வீழ்ச்சிக்கு அவரது பணி அழுத்தங்களும் ஒரு முக்கிய காரணம். சில மாதங்களுக்கு முன்புவரை இந்திய கிரிக்கெட் அனியில் டெஸ்ட் கேப்டன், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன், டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் என 3 மகுள்கிரீடங்களை விராட் கோலி சுமந்திருந்தார்.
இப்படி சதா சர்வ காலமும் கேப்டன் பொறுப்பேற்று உழன்றுகொண்டு இருப்பதால், அணியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விராட் கோலி. இதனால் சொந்த பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாமல் போனது. கோலியின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
“இப்படியே போனால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்து விடும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது கோலி இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளாவது கிரிக்கெட் போட்டிகளில் ஆடவேண்டும். அதற்கு தயாராக அவர் சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி.
இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ரவி சாஸ்திரி சொல்வதைப் போல், இந்த தொடர் தொடங்குவதற்குள் விராட் கோலி 3 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, தன் பழைய குருநாதர்களிடம் சென்று தன் பேட்டிங் தவறுகளை திருத்திக்கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சச்சினின் சாதனைகளை உடைத்து, புதிய கிரிக்கெட் கடவுளாக அவரால் அவதாரம் எடுக்க முடியும்.
தனது கிரிக்கெட் ரசிகர்களுக்காக அவர் இதைச் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.