தமிழகத்துக்கு இன்று சோகமான காலையாக விடிந்ததுள்ளது. தஞ்சாவூரில் உள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடந்த தேரோட்டத்தின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், விபத்து நடந்த அப்பர் கோயிலைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சித்திரை மாதத்தில் அப்பர் பிறந்த நட்சத்திரத்தில் தமிழகத்தில் சில கிராமங்களில் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி கொண்டாடும் கிராமங்களில் தஞ்சையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மட்டுமே தள்ளியுள்ள களிமேடு கிராமமும் ஒன்று. 90 ஆண்டுகளுக்கு முன் உயிர்க்கொலை பாவம் என்று கருதிய ஊர் பெரியவர்களான பொன்னுசாமி வங்கார், பூமாலை சோழகர், சுப்பையா ஸ்வாமிகள், கலியபெருமாள் வங்கார் உள்ளிட்டவர்கள் இங்குள்ள கோயிலை உருவாக்கியுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் உருவானதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
இங்கு தஞ்சைப் பாணி ஓவியத்தில் அமைந்த அப்பரின் 300 ஆண்டுகால ஓவியம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓவியத்தை தேரில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபடுவது இவ்வூர் மக்களின் வழக்கம்.
அந்த வகையில் 94-வது ஆண்டாக இந்த ஆண்டும் நேற்று இரவு தேர் திருவிழா நடைபெற்றது. ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தேர் நிற்க, அங்குள்ளவர்கள் தேங்காய் மற்றும் பழம் வைத்து சாமியை வழிபட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் அதிகாலை வரை நீடித்தது. இந்நிலையில் அதிகாலை 3.15 மணியளவில் கீழ்த் தெருவில் இருந்து முதன்மைச் சாலைக்கு தேர் திரும்பியபோது அதன் உச்சியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்சார ஒயரில் தேரின் அலங்கார தட்டி உரசியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இந்த ஊரில் உள்ள சாலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது விபத்துக்கான முதல் காரணமாக கூறப்படுகிறது.
“வழக்கமாக சாலையின் மிக உயரத்தில்தான் மின் கம்பிகள் இருக்கும். இதனால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளன. அப்போது பழைய சாலை 2 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது” என்கின்றனர் இப்பகுதி மக்கள். சாலைக்கும் மின் கம்பிக்கும் இடையிலான உயரம் குறைந்தது விபத்துக்கான முதல் காரணமாக கூறப்படுகிறது.
தேரை இழுத்தவர்கள் அதைத் திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சாலையில் சிக்கிக்கொண்டது. இதனால், மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்புவதற்கு பதிலாக, சாலைதான் அகலமாக உள்ளதே என்று சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர். அப்படி தேரை வளைத்து இழுக்கும்போது அதன் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த கும்பம் சாலையின் மேலே அமைக்கப்பட்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது விபத்துக்கான இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணமாக சாலையில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் கருவியை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை தேரை இழுத்தவர்களும் ஜெனரெட்டரை இயக்கி வந்தவர்களும் கவனிக்கவில்லை.
இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் தேர் மீது பாய்ந்தது. தேரைச் சுற்றி இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட முதல்வர் தஞ்சை புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.