இந்தியாவில் இது விலைவாசி உயர்வு சீசன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்று ஒருபுறம் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மறுபுறம் அரிசி, காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து வருகின்றன.
இதெல்லாம் போதாதென்று இப்போது சமையல் எண்ணெயின் விலையும் வரலாறு காணாத அளவில் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் நிற்கவில்லை, விரைவில் பாமாயில் விலையும் ஆகாயத்தை தொடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இந்தோனேசியா.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிக அளவில் சமையல் எண்ணெய்யை பயன்படுத்தும் நாடாக உள்ளது. 2021- 22 நிதியாண்டில் இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக உள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் சமையல் எண்ணெய்யோ 23 மில்லியன் டன். அதனால் சுமார் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
மக்களின் அன்றாட சமையலுக்கு தேவைப்படும் எண்ணெய்யை பல்வேறு நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளை பாமாயிலுக்காகவும், அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளை சோயாபீன் எண்ணெய்க்காகவும், உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளை சூரியகாந்தி எண்ணெய்க்காகவும் இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.
இதில் தற்போது உக்ரைன் போர் நடந்து வருவதால் அந்நாடுகளில் இருந்து கிடைக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு ஏற்கெனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்போது பாமாயிலுக்கும் பிரச்சினை வந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு 8.3 மில்லியன் டன் பாமாயில் தேவைப்படுகிறது. இதில் பாதிக்கும் மேல், அதாவது 4 மில்லியன் டன்னுக்கும் மேற்பட்ட பாமாயிலை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மலேசியாவில் இருந்து 3.8 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம்.
தற்போது இந்தோனேஷியாவில் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமான பாமாயில் இல்லை என்று கூறி, அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது அந்த நாட்டு அரசு. ஏப்ரல் 28-ம் தேதியில் இருந்து எந்த நாட்டுக்கும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டுக்கு அடுத்ததாக அதிக அளவில் பாமாயில் தயாரிக்கும் தாய்லாந்திடம் இருந்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளும் இதேபோல் தாய்லாந்திடம் பேசி வருவதால் எந்த அளவுக்கு அந்நாட்டிடம் இருந்து கூடுதல் எண்ணெய்யை வாங்க முடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
“பாமாயில் விலை ஏறினால் என்ன? நான் பாமாயிலை பயன்படுத்துவது இல்லையே.. அதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவர் ஒருவர் நேரடியாக பாமாயிலை பயன்படுத்தாவிட்டாலும் அவருக்குத் தெரியாமலேயே மறைமுகமாக நிறைய பாமாயிலை பயன்படுத்துகிறார்.
சாக்லேட், பிஸ்கெட், நூடுல்ஸ், ஷாம்பு, சோப் போன்ற பல பொருட்களை தயாரிக்க பாமாயில் தேவைப்படுகிறது. இதனால் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இந்தியாவுக்கு மட்டுமாவது கொஞ்சம் பாமாயில் அனுப்பும்படி அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு உள்ள தட்டுப்பாட்டால் மற்ற எண்ணைய்களை மக்கள் வாங்கத் தொடங்குவார்கள்.
அதனால் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதனால் அடுத்த 2 மாதங்களில் சமையல் எணெய்களின் விலை 25 சதவீதம் வரை உயரலாம் என்று கணிக்கப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள Indian Vegetable Oil Producers அமைப்பின் தலைவர் சுதாகர் ராவ் தேசாய், “மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலை உயரக்கூடும். இந்தோனேசியாவில் நிலைமை சீராகி, அந்நாட்டில் இருந்து பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சமையல் எண்ணெய்க்கு மற்ற நாடுகளை சார்ந்தே வாழவேண்டிவரும்” என்கிறார்.
அரசு நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்… விலை உயர்வை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நாமும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.