தமிழ் நாட்டில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கிறது. கரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக மதியம் முதல் இரவு வரை விடுவிட்டு மின்வெட்டு நீடித்தது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட மின் தடை குறித்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது விளக்கத்துக்கு பிறகு நேற்றும் மின் வெட்டு ஏற்பட மக்கள் டென்ஷனாகி இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டின் நிலைமை சீரடையும் என்று அமைச்சர் சொன்னாலும் இந்தியாவின் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதைதான் நாட்டின் நிலக்கரி நிலவரம் சுட்டிக் காட்டுகிறது.
All India Power Engineers Federation என்ற அமைப்பின் தலைவரான சைலேந்திர தூபே கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பல அனல் மின் நிலையங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான நிலக்கரிகூட கையிருப்பில் இல்லை. இப்படியே போனால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இனிவரும் காலத்தில் கடுமையான மின்வெட்டுகள் இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரிக்கும் மின்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தினமும் 3,95,075 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் அதிகபட்சமாக அதாவது 2,03,900 மெகாவாட் (மொத்த உற்பத்தியில் 51.6 சதவீதம்) மின்சாரம் நிலக்கரியில் இருந்து எடுக்கப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து 26.8 சதவீத மின்சாரமும், தண்ணீரில் இருந்து 11.8 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த வகையில் நிலக்கரியில் இருந்து மின்சாரத்தை எடுப்பதற்காக நாடு முழுவதும் 172 அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2022 நிதி ஆண்டின்படி இந்நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 1 பில்லியன் டன் அதாவது 100 கோடி டன் அளவுக்கு நிலக்கரி தேவைப்படுகிறது. International Energy Agency வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி 2024-ம் ஆண்டில் இந்த நிலக்கரி தேவை 1.18 பில்லியன் டன்னாக அதிகரிக்கும். ஆனால் இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் நிலக்கரியின் உற்பத்தி அதிகரிக்காமல் உள்ளது.
தற்போது 716 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி முன்பிருந்த அளவில் இந்தியாவால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை பெற முடியவில்லை.
கரியமில வாயுவை வெளியிடுவதைக் குறைக்க, உலக நாடுகள் பலவும் முடிவு செய்துள்ளதால் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை குறைத்தது இதற்கு முக்கிய காரணம்.
இந்தச் சூழலில் நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கும் என்ற செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இதனால் நாட்டின் பல மாநிலங்கள் – முக்கியமாய் வட மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். போதிய அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு மாத காலத்துக்கான நிலக்கரி உள்ளது அதனால் அச்சப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் வட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது.
சரி, நிலக்கரி தட்டுப்பாடு வந்தால் தமிழகத்துக்கு எந்த அளவில் பாதிப்பு இருக்கும் என்ற கேள்வி வரலாம்.
தமிழ்நாட்டின் மின்சார சூழலைப் பார்த்துவிடுவோம்
சராசரி தேவை: நாளொன்றுக்கு 15,000 மெகாவாட்
கோடை காலத்தில் அதிகபட்ச தேவை – சுமார் 17000 மெகாவாட்
உச்சத்தை தொட்டது: 16846 மெகாவாட், 10.4.2021
இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது இந்தக் கோடை காலத்தில் நமக்கு சராசரியாக 16,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
தமிழ் நாட்டில் தற்போது வட சென்னையில் இரண்டு, மேட்டூரில் இரண்டு, தூத்துக்குடியில் ஒன்று என 5 அனல் மின் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த அனல் மின் நிலையங்களின் மொத்த உற்பத்தி திறன் 4320 மெகாவாட்.
இந்த அனல் மின் நிலையங்களுக்குதான் நிலக்கரி தேவைப்படுகிறது.
நிலக்கரி இரு வழிகளில் நமக்கு கிடைக்கிறது. ஒன்று இந்தியாவிலிருந்து பெறப்படும் நிலக்கரி. மற்றொன்று இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி.
இந்தியாவில் கோல் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளிலிருந்து வருகிறது. நமக்கு அதிகமாய் வருவது மேற்கு வங்கத்திலிருந்து, இவை தவிர தெலங்கானாவில் சிங்கரேணியிலிருந்தும் நிலக்கரி நமக்கு வருகிறது.
ஒடிசாவிருந்து வரும் நிலக்கரி என்னூர் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்கிறது. சிங்கரேணி நிலக்கரி விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து தமிழகம் வருகிறது.
நமக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 21 மில்லியன் மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இதில் 14 மில்லியன் டன் கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து வருகிறது. மீதமுள்ள நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் இருக்கும், மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மின் துறை வல்லுநர்கள்.
இந்தச் சீழலில் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டை சமாளிக்க தமிழக அரசு தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக நிர்வாகி எஸ்.கே.பி கருணா, “பகலில் அதிகபட்சம் ரூ 3.50-க்கு கிடைக்கும் தனியார் மின்சாரத்தின் விலை இரவில் யூனிட் 20 ரூபாய்! நேற்றிரவு மட்டும் 35 கோடிக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி உள்ளோம். இதே விலையில் 10 நாட்களுக்கு வாங்கினால் ரூ.350 கோடி போச்சு. அதிலும் கணிசமான பில் அதானிக்கு போகும் என்பது வேற விஷயம்.
மத்தியத் தொகுப்பில் இருந்து இதேபோல மின்சாரம் குறைவாக தந்தாலோ, நமக்குத் தேவையான நிலக்கரி அளவைக் குறைத்தாலோ வரும் மே மாதம் மிக அதிகமான பவர் கட் மற்றும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
இரவில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை இயன்றவரை குறைத்து சிக்கமாக இருந்து அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும். மிக அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை இரவு ஷிஃப்ட் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். விவசாய கரண்ட் முழுவதும் பகலில் தடையில்லாமல் தந்து விட்டு இரவில் நிறுத்தலாம். தென்மேற்கு காற்று தொடங்கி காற்றாலைகள் உற்பத்தி வந்து விட்டால் மீண்டும் மின்மிகை மாநிலமாக ஆகிடலாம்.இனி எக்காலத்திலும் நிரந்த தீர்வு வேண்டுமெனில், domestic user கள் 65% பேர்களையாவது solar power with batter backup போகும்படி சிறப்புத் திட்டம் போட வேண்டும். அதுதான் மேற்கொண்டு காற்று மாசு இல்லாமல் மின்சாரத்தில் தன்னிறைவு அடையச் செய்யும் நல்ல வழி. இந்த அரசு செய்யும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மின்சாரப் பிரச்சினையில் இனி வரும் காலத்தை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.