No menu items!

நியூஸ் அப்டேட்: கோடநாடு கொலை வழக்கு விசாரணை –  கண்கலங்கிய சசிகலா

நியூஸ் அப்டேட்: கோடநாடு கொலை வழக்கு விசாரணை –  கண்கலங்கிய சசிகலா

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த பொருட்களும் களவாடப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று காலை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது சசிகலா கண் கலங்கி, அழுதார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா குறித்த கேள்விகளுக்கு சசிகலா உணர்ச்சிவசப்பட்டதால் விசாரணையை நிறுத்தி வைக்கப்பட்டிருக்குறது.

அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் – முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேசும் போது, “அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து; விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது. தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும்.  ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது; சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த, பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும்” என கூறினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர்: சிறப்பு வரவேற்பு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை அலுவலகப் பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.  இங்கிலாந்து பிரதமருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நகரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் வரை 4 கி.மீ பாதையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை எங்கிலும் பாரம்பரிய குஜராத்தி நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை குழுவினர் நடத்தினர். குஜராத்தில் ஒரு நாள் தங்கயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருவரும் இருநாட்டின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தார மணம் புரியும் அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு – தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை

தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘அரசுப் பணியாளர்கள் சிலரின் இறப்பிற்கு பின்பே அவர்கள் இரு தார மணம் புரிந்தது தெரியவருகிறது. இதன் காரணமாக அப்பணியாளர்களின் வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதிய பலன்களை அளிப்பதில் இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே, அரசுப் பணியாளர்கள் முதல் மனைவி அல்லது கணவர் இருக்கும் போதே இரண்டாவதாக ஒருவரை மணம் புரிந்தாலோ அல்லது வேறு தவறான நடத்தையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தவிர குற்றவியல் வழக்கு பதியவும் அறிவுறுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,600 கோடி) நிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால், இந்தியா வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் சூழல் நிலவுவதால் இலங்கை மீண்டும் கடனுதவி கேட்டு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறும் போது, “இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது” என்றார்.

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண் – கைவிட்ட தோழி: மதுரையில் பரிதாபம்

மதுரையை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள்  நீண்டநாட்களாக தோழிகளாக இருந்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, இளம்பெண்ணில்  ஒருவர் தன்னை உடலளவில் ஆணாக மாற்றிக்கொள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஆண் தன்மையை அடைவதற்கான மரபணு (ஹார்மோன்) ஊசியையும் செலுத்தி வந்துள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு திருப்பரங்குன்றம் பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து ஆத்திரப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர், அவரை  பிரித்து அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, இளம்பெண் ஆணாக மாறிய தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனக்கூறி எழுதிக் கொடுத்து விட்டு தனது பெற்றோருடன் சென்று விட்டார். தனது தோழிக்காக உடலை இழந்து, பணத்தையும் இழந்து, தற்போது செய்வதறியாது நிர்கதியாக நிற்கும் பெண்ணின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...