No menu items!

ஐபிஎல்லை கலக்கும் 150 கிமீ வேக காஷ்மீர் புயல்

ஐபிஎல்லை கலக்கும் 150 கிமீ வேக காஷ்மீர் புயல்

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒரு மாணிக்கத்தை இந்திய கிரிக்கெட் கண்டெடுக்கும். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், நடராஜன் என்று ஐபிஎல்லில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கங்களின் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடும் இவரது சொந்த ஊர் ஜம்மு காஷ்மீர்.

ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான பந்தை வீசியது, தொடர்ந்து 5 பந்துகளை 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது என பல்வேறு சாதனைகளை இந்த ஐபிஎல்லில் நிகழ்த்தியிருக்கிறார் 22 வயதான உம்ரான் மாலிக்.

சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வசதிகள் ஏதும் சிறுவயதில் உம்ரான் மாலிக்குக்கு கிடைத்ததில்லை. தீவிரவாதத்தோடு சதா போராடிக்கொண்டிருக்கும் ஜம்முதான் உம்ரான் மாலிக்கின் சொந்த ஊர். அவரது அப்பா ஒரு சாதாரண பழ வியாபாரி.

சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட உம்ரான் மாலிக், தினமும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு மைதானத்துக்கு கிளம்பிவிடுவார்.

“என் மகனின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை. அவன் கேட்ட விஷயங்களை எல்லாம் எப்படியாவது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிக் கொடுத்துவிடுவேன். அதேநேரத்தில் கிரிக்கெட்டில் காட்டும் அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்டவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டேன்” என்கிறார் உம்ரான் மாலிக்கின் அப்பா அப்துல் ரஷித்.

அப்பாவின் ஊக்குவிப்பும், நண்பர்களின் ஆதரவும் இருந்தாலும், பெரிய மைதானங்களிலோ, முறையான கிரிக்கெட் பந்திலோ ஆடும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக உம்ரான் மாலிக்குக்கு கிடைக்கவில்லை. தனது 17 வயதுவரை சாதாரண ரப்பர் பந்துகளில்தான் உம்ரான் மாலிக் ஆடினார். அதுவும் பகல் நேரத்தில் அல்ல. பள்ளி முடிந்ததும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவர் கிரிக்கெட் ஆடினார்.

17 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்துகளில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அப்படி ஒருநாள் மாலையில் சிமெண்ட் பிட்ச்சில் பந்து வீசிக்கொண்டு இருந்தபோது, ரந்தீர் சிங் மனாஸ் என்பவரின் பார்வையில் அவர் பட்டுள்ளார். அவர் பந்து வீசும் ஸ்டைலும், வேகமும் ரந்தீரை கவர அவரை அழைத்துப் பேசியுள்ளார்.

“இவ்வளவு சிறப்பாக பந்து வீசுகிறாயே. யார் நீ. எந்த அகாடமியில் பயிற்சி பெறுகிறாய்?” என்று உம்ரான் மாலிக்கை கேட்டுள்ளார் ரந்தீர் சிங்.

“பயிற்சி மையமா?… அதைப்பற்றியெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை. வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் ஆடுவதோடு சரி” என்று உம்ரான் மாலிக் பதில் அளித்துள்ளார். முறையாக பயிற்சி பெறாமலேயே இப்படியா என்று ஆச்சரியப்பட்ட ரந்தீர் சிங், தனது பயிற்சி மையத்தில் உம்ரான் மாலிக்குக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

வேகமாக பந்து வீசினால்ம், அதை டெலிவரி செய்வதிலும், கடைசி கட்டத்தில் பந்தை ரிலீஸ் செய்வதிலும் ஆரம்ப காலகட்டத்தில் உம்ரான் மாலிக் சில தவறுகளைச் செய்துவந்தார்.

அந்த தவறுகளை நீக்கி அவரை மெருகேற்றினார் ரந்தீர் சிங்.
இந்த நேரத்தில் 19 வயதுக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் அணிக்கான தேர்வு நடப்பதாக தெரியவந்ததும் அணித்தேர்வு நடக்கும் இடத்துக்கு நேரில் சென்றார். ஆனால் மாவட்ட அளவிலான போட்டிகளிலோ அல்லது கிளப் கிரிக்கெட் போட்டிகளிலோ ஆடாத உம்ரான் மாலிக்கை ஆரம்பத்தில் யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் ஆடிவிட்டு வரும்படி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் உம்ரான் மாலிக் விடவில்லை. ஒருமுறையாவது தான் பந்து வீசுவதை பார்க்கும்படி தேர்வாளர்களிடம் கெஞ்சி இருக்கிறார். இதனால் போனால் போகிறதென்று ஒரு முறை பந்துவீச்க் காட்டுமாறு சொல்லியிருக்கிறார்கள் தேர்வாளர்கள்.

அவர் பந்து வீசிய வேகத்தைக் கண்டதும் ஒருகணம் உறைந்துநின்ற தேர்வாளர்கள், மறுபேச்சு பேசாமல் அணியில் சேர்த்துள்ளனர். அன்றுமுதல் அவரது கிராஃப் ஏறத் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீர் அணிக்காக சில போட்டிகளில் ஆடிய உம்ரான் மாலிக் மீது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பார்வை பட, அந்த அணியில் அவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கடைசி சில போட்டிகளில் மட்டுமே உம்ரான் மாலிக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சில வாய்ப்புகளிலேயே உம்ரான் மாலிக் மிரட்ட, ஹைதராபாத் அணி அவரைத் தக்க வைத்தது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினின் மேற்பார்வையில் அவருக்கு பயிற்சி அளித்து பட்டை தீட்டியது.

கடந்த ஆண்டு பார்த்தது வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சரே இந்த ஆண்டுதான் என்பதைப் போல இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தி வருகிறார் உம்ரான் மாலிக். இந்த ஆண்டில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

விக்கெட்களைவிட தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசும் உம்ரான் மாலிக்கின் ஆற்றல்தான் கிரிக்கெட் ரசிகர்களையும், வல்லுநர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிலும் கடந்த 11-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153.1 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் மிரளச் செய்துள்ளார் உம்ரான் மாலிக். கடந்த 15 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் வீசப்பட்ட மிகவும் வேகமான பந்தாக இது அமைந்துள்ளது. அத்துடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடிக்கப்படும் 20-வது ஓவரில் ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் உம்ரான் மாலிக் பந்து வீசியது அவரது பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது. அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.

எப்படியோ இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதாக ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...