துடிப்பான இளம் வீரர்கள் வேண்டுமா அல்லது தோனிக்குப் பிடித்த பழைய வீரர்கள் வேண்டுமா என்ற கேள்வி எழுந்த சூழலில் தோனிக்கு சாதகமான முடிவை எடுத்தது சிஎஸ்கே நிர்வாகம். 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் பழைய வீரர்கள் பக்கம் நின்றது.
ரைட் டு மேட்ச் முறையில் பப் டுபிளெஸ்ஸி, ட்வைன் பிராவோ ஆகியவர்கள் முதலில் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து முரளி விஜய், ஷேன் வாட்சன், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், அம்பட்டி ராயுடு ஆகியோர் வாங்கப்பட்டனர். இதில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். இதனால் ஏலத்துக்குப் பின்னர் ‘டாடீஸ் ஆர்மி’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பலரும் கிண்டலடித்தனர். ஆனால் சிஎஸ்கே நிர்வாகமும் தோனியும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. வெற்றிக்கு இந்தப் படை போதும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி பங்கேற்ற முதல் போட்டி 2018 ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை எதிர்கொண்டது. முதலில் ஆடிய மும்பை அணி 165 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய சென்னை 84 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்தது.
சென்னையை விட்டு ஆட்டம் கைவிட்டுப் போனதாக அனைவரும் கருதிய நிலையில் அதற்கு உயிர்கொடுத்தார் பிராவோ. வெறும் 30 பந்துகளில் பிராவோ 68 ரன்களைக் குவிக்க, கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது சென்னை.
அடுத்த ஆட்டம் சென்னையில் நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சிஎஸ்கே ஆடும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. சிஎஸ்கே நிர்வாகமும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைதானம் முழுக்க மஞ்சள் நிறமாய் மாறி இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் காவிரிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுத்தது. “விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையில் சென்னையில் கிரிக்கெட் எதற்கு?” என்ற கேள்வியுடன் தமிழர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
போட்டியை நடத்த விடமாட்டோம் என்று எச்சரித்தன. அதையும் மீறி சென்னையில் ஆட்டத்தை நடத்த பிசிசிஐ முடிவெடுக்க, போலீஸாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்தச் சூழலில் போட்டி நடந்த ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் பெரிய அளவில் சாலை மறியல் நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் அணிகளை சேப்பாக்கம் மைதானத்துக்குள் கொண்டு செல்லவே போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டனர். போட்டியின்போதும் ரசிகர்கள் சிலர் இடையூறு செய்தனர்.
பல இன்னல்களுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது. அதேநேரத்தில் பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் இப்போட்டி நடத்தப்பட்டதால், சென்னையில் இனியும் போட்டிகளை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து சென்னை அணி பங்கேற்ற போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன. மிகுந்த மனச்சுமையுடன் சென்னையை விட்டுச் செல்வதாக ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிஎஸ்கே ரசிகர்களும் தங்கள் வீரர்களை கண்ணீருடன் அனுப்பிவைத்தனர்.