கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் நாளுக்கு நாள் நிலமை மோசமாகி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். கொழும்பு காலிமுகத் திடலில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 10-வது நாளாக தொடர்கிறது.
விடுதலைப் புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை வீழ்த்திவிட்டார் என்றுதான் ராஜபக்சே குடும்பத்தினரை சிங்கள மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தனர். ஆனால், இன்று அதே சிங்கள மக்கள்தான் ராஜபக்சேக்களை ஆட்சியில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே வெளியேறச் சொல்லி வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு மற்றொரு பின்னடைவாக கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையின் நிதி நிலைமை சீராகும் வரை வெளிநாட்டு கடன்களை திரும்ப தர இயலாது என்று இலங்கை மத்திய வங்கி அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவை இலங்கை எந்தளவு நெருக்கடியில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.