No menu items!

நியூஸ் அப்டேட்: நரிக்குறவர் வீட்டில் கறி சோறு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நியூஸ் அப்டேட்: நரிக்குறவர் வீட்டில் கறி சோறு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் நரிக்குறவ இன மக்களுடன் சேர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்ற முதல்வர் காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார். இது தொடர்பாக, “கறி சோறு சாப்பிட்டேன். கொஞ்சம் காரமாக இருந்தது” என்றார் ஸ்டாலின். முன்னதாக, நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகிய மாணவிகள் தங்கள் கல்விக்கு உதவி வேண்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவிகளை நேரில் சந்தித்து தனது பாராட்டைத் தெரிவித்தார். அப்போது, தங்களது குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நீங்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று மாணவிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, குஜராத், ஹரியானாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கைக்கு அனைத்து நகரங்களும் மாறி வருகிறது. முககவசம் அணிவது சட்டரீதியாக கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஹரியானா, டெல்லி, குஜராத் உட்பட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்தவாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 26 சதவீதம் அதிகரித்துள்ளனர். அங்கு ஒரு வாரத்தில் 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் கடந்த வாரம் 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், டில்லியில் மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என டில்லி அரசு அறிவித்துள்ளது.

குறைந்த தங்கம் விலை: கிராம் ரூ. 5,006, சவரன் ரூ. 40,048-க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து ரூ.40,000-ஐ தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 48 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.5,006-க்கும், ஒரு சவரன் ரூ.40,048-க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கும் விற்கப்படுகிறது.

ரஷ்ய போர்க் கப்பலைக் கடலில் மூழ்கடித்த உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்நிலையில், கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஆனால், ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட சேதத்தால் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது அதன் சமநிலையை இழந்து கப்பல் மூழ்கியது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பூமியை நோக்கி வரும் ராட்சத வால் நட்சத்திரம்: கண்டறிந்த நாசா

இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.  ‘இப்போது இந்த வால் நட்சத்திரம் சூரியனிடம் இருந்து 200 கோடி மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ளது. இது நமது சூரிய மண்டலத்தின் தளத்துக்குக் கிட்டத்தட்ட செங்குத்தாக விழுந்து கொண்டிருக்கிறது. இது இதுவரை வானியலாளர்கள் பார்த்த அனைத்து வால் நட்சத்திரங்களை விடவும் மிகப்பெரியது. இந்த வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில்லியன் டன்கள். இது 137 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. ஆனால், இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், அதிகபட்சமாக சூரியனில் இருந்து ஒரு பில்லியன் மைல் தொலைவுக்குத்தான் அது நெருங்கி வரும். அதுவும் 2031-ஆம் ஆண்டுக்குள் நடக்காது’ என்று நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...