No menu items!

முதல்வர் Vs கவர்னர் – டீ பார்ட்டி அரசியல்

முதல்வர் Vs கவர்னர் – டீ பார்ட்டி அரசியல்

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறது தமிழக அரசு. திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தேநீர் விருந்துக்கு செல்லவில்லை. அதிமுக, பாஜக மட்டும் பங்கேற்றிருக்கின்றன. இதுவே கவர்னர் மாளிகை அரசியலாகியிருப்பதைக் காட்டுகிறது.

‘நான் நேரில் சந்தித்து மசோதா குறித்து வலியுறுத்தியபோது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும், கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், முன்னேற்றம் இல்லை. இதனால், எனது அமைச்சரவையின் 2 மூத்த அமைச்சர்கள் உங்களை சந்தித்து இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த அனுப்பி வைத்தேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த கலந்துரையாடலின் போது மசோதாவானது குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர்களுக்குச் சாதகமான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை’ என்று தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

நீட் மசோதா மட்டுமில்லை, தமிழக அரசின் 19 மசோதாக்கள் ஆளுநரிடமும் மத்திய அரசிடமும் காத்திருக்கின்றன.

‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்களுக்கு, இதுவரை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க பெறாததால் அரசாணை வெளியிட்டு செயல்படுத்த முடியாத நிலை‌ உள்ளது, இது எந்த வகையிலான ஜனநாயகம்?’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இத்தனை மசோதாக்கள் காத்திருப்பது மத்திய அரசின் மாநில விரோதப் போக்கை காட்டுகிறது.

மசோதாக்கள் மட்டுமல்ல, துணை வேந்தர் நியமனங்களிலும் தமிழக அரசுக்கு முரண்பட்டு நிற்கிறார் ஆளுநர்.

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு அமைக்கும் குழு தேர்ந்தெடுத்து சில பெயர்களை பட்டியலிட்டு அரசுக்கு அளிக்கிறது. அந்த பட்டியலிலிருந்து 3 பேரை அரசு தேர்ந்தெடுத்து மூவர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அந்த மூவரில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார். இதுதான் மரபு. நடைமுறை.

எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் சுதா சேஷையனின் பதவிக் காலம் 2021 டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்தது. அந்த இடத்துக்கு மூவர் பெயர் கொண்ட பட்டியலை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் அந்தப் பட்டியல் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஏப்ரல் மாதம் வரை துணை வேந்தர் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டது.

கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி, டாக்டர் சுதா சேஷய்யன் பதவி காலத்தை வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அது மட்டுமில்லாமல், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு குழு அமைக்கவும், அந்த குழுவின் மூலம் புதிய விண்ணப்பங்களை பெற்று துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவும் தமிழக அரசை, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநரின் இந்த முடிவும் தமிழக அரசை காயப்படுத்தியிருக்கிறது. அரசின் செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடாக பார்க்கிறது.

ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் முரண்பாடு ஏற்படுவது புதிதில்லை. அண்ணா காலத்திலிருந்தே பல ஆளுநர்களுடன் திமுக முரண்பட்டிருந்திருக்கிறது.

2001-ல் ஜெயலலிதா ஆட்சியில் கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது ஆளுநர் ஃபாத்திமா பீவி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தது, திமுக. மத்தியில் வாஜ்பாய் ஆட்சி. அமைச்சரவையில் திமுகவும் இருந்தது. திமுகவின் அழுத்தத்தால் ஆளுநர் ஃபாத்திமா பீவி தமிழ்நாட்டிலிருந்து தூக்கப்பட்டார்.

ஜெயலலிதா – சென்னா ரெட்டி மோதல்தான் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆளுநர் – முதல்வர் மோதல். அந்த மோதலின்போது 1994-ல் குடியரசு தின தேநீர் விருந்தில் ஆளுநர் மாளிகைக்கு செல்லாமல் அதிமுக அரசு புறக்கணித்தது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அது போன்ற ஒரு புறக்கணிப்பை செய்திருக்கிறார்.

தேநீர் புறக்கணிப்புடன் மோதல் நின்றுவிடவில்லை.

திமுக கூட்டணிக் கட்சியினர் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்ததைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலடித்திருக்கிறார். “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் கிண்டலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநாவஸ், “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ் நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பைத் தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆக தேநீர் விருந்து புறக்கணிப்பு கடுமையான அரசியல் மோதலாக மாறிக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் ஆளுநரை வைத்து அரசியல் செய்யும் வியூகத்தைத் தமிழ் நாட்டிலும் பாஜக கையிலெடுத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், தமிழ் நாட்டில் இது செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...