சமீபத்தில் ஒடிடி-யில் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸூம் ‘பீஸ்ட்’ புகழ் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடித்த ‘ராதே ஷ்யாம்’ தெலுங்குப் படம் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
காரணம், பாகுபலியில் இருந்த பிரபாஸூக்கும் ராதே ஷ்யாமில் நடித்திருக்கும் பிரபாஸூக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். ஒரு ரவுண்ட் அதிகம் எடை போட்டிருந்தார். இறுக்கமான உடல் மாறி மென்மையான உடலாக மாறியிருந்தது. முகத்தில் ஆக்ரோஷம் குறைந்து அன்பு நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாக பிரபாஸின் நடை முற்றிலும் மாறியிருந்தது.
என்ன காரணம்?
ராதே ஷ்யாம் படத்துக்காக தனது உடலை மாற்றி அமைத்துக் கொண்டாரா?
இல்லை.
முட்டி வலியால் அவதிப்பட்டு வந்த பிரபாஸ் அதற்கான முட்டி அறுவைச் சிகிச்சையை செய்துகொண்டார். இதனால் ஜிம்மிற்கு மாதக்கணக்கில் மெடிக்கல் லீவு போட்டு விட்டார். விளைவு உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிவிட்டது.
பாகுபலியில் வரும் மஹேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான டயட் என்று மூன்று வருடங்கள் தவம் போல் பிரபாஸ் இருந்திருக்கிறார். பாகுபலி முடிந்ததும் வழக்கமான வாழ்க்கை முறைக்கு மாறியதால் உடல் ரீதியாகவும் அவருக்கு பிரச்சினைகள் எழுந்ததாக கூறுகிறார்கள்.
பாகுபலி படப்பிடிப்பின்போது தூங்கும் நேரம் மிகக் குறைவாக இருந்திருக்கிறது. பாகுபலிக்குப் பிறகு தூங்கும் நேரத்தை வெகுவாக மாற்றியிருக்கிறார்.
இரவு லேட்டாக தூங்கி, மறுநாள் மாலை லேட்டாக எழுந்திருப்பது அவரது வாடிக்கையாக மாறிவிட்டது. இதுவும் அவர் எடை கூட காரணமாகிவிட்டது.
இந்த பஞ்சாயத்துகளால், ராதே ஷ்யாம் படப்பிடிப்புக்கு வந்த பிரபாஸை பார்த்த படக்குழுவினருக்கு அதிர்ச்சி. வேறு வழியே இல்லாமல், அவரை திரையில் அழகாய் காட்ட கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் மாயஜாலத்தை நம்ப வேண்டியதாயிற்று.
10 கோடி செலவு செய்து பிரபாஸை அழகாய், அம்சமாய் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும், பழைய பிரபாஸ் இல்லை என்று அவரது ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.