இலங்கை பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் நெருக்கடியாக வளர்ந்திருக்கிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். ஆனால், மகிந்தவும் கோத்தபயாவும்கூட பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும் கோட்டாபய முயற்சிக்கும் யாரும் ஆதரவளிக்கவில்லை. தென்னிலங்கை எரியும் இந்த சூழலில் இலங்கையின் வடக்கு பகுதிகள் எப்படியிருக்கிறது? ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? ‘வாட்ஸ் அப்’ மூலம் அங்கிருக்கும் சிலருடன் பேசினோம்.
“சிங்களர்கள் அதிகமாக வாழும் தென் இலங்கையுடன் ஒப்பிடும்போது வட மாகாணத்தில் தமிழர்கள் பகுதிகளில் பிரச்சினையோ நெருக்கடியோ இல்லை. எப்போதும் போல்தான் எங்கள் வாழ்க்கை உள்ளது” என்றார் நம்முடன் பேசிய யாழ்ப்பாணத்தவரான ராஜசிங்காரம்.
இதையே வவுனியாவைச் சேர்ந்த ஆத்மனும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜசிங்காரம், “யாழ்ப்பாணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. ஈழத் தமிழர்களின் பிரதான தொழில் விவசாயமும் மீன்பிடித்தலும்தான். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன. அரிசி போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கடைகளிலும் நெருக்கடி இல்லாமல் பொருட்கள் வாங்க முடிகிறது.
மீன்கள் தாராளமாக உள்ளதால் மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு கிலோ வெண்டைக்காய் விலையில் ஒரு கிலோ மீன் வாங்கிவிட முடியும்.
அதேநேரம் பால்மா, வெங்காயம், ஏலக்காய் போன்ற இறக்குமதி செய்யப்பட்டு வெளியிலிருந்து வரும் பொருட்கள் தமிழர்கள் பகுதியிலும் அதிகம் கிடைப்பதில்லைதான். விலையும் அதிகம். என்றாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், அதாவது அவரவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் உதவுவதால் பிரச்சினையில்லை” என்றார்.
வவுனியாவைச் சேர்ந்த ஆத்மன், “இலங்கையில் இன்று நிலவும் பொருளாதார பிரச்சினை ஈழத் தமிழர்களுக்கு புதிதல்ல.
போர் நடக்கிற காலத்தில், 30 ஆண்டுகளாக, வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் இதைவிட மோசமான ஒரு வாழ்க்கையைக் கடந்து வந்துள்ளோம். பொருளாதாரத் தடைகள் காரணமாக மருந்து, உணவு, சுகாதாரப் பொருட்கள், எண்ணெய் உட்பட மிகப் பெரிய தட்டுப்பாட்டை சந்தித்துத்தான் வாழ்ந்திருக்கிறோம்.
பெட்ரோல் இல்லாமல் சைக்கிள்தான் பாவித்தோம். கரண்ட் இல்லாத காலங்களை சைக்கிள் டைனமோவால்தான் சமாளித்தோம். மண்ணெண்ணெய்தான் அப்போது எல்லாவற்றுக்கும். எனவே, தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினையை நாங்கள் பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை. ஆனால், சிங்களர்களுக்கு இது புது விஷயம். நிச்சயம் அவர்களுக்கு இது பெரிய அடிதான். கொழும்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது புதுசு என்பதால் போராடுகின்றனர்.
அப்பகுதியில் நடைபெறும் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை அரசு முடக்கியது. அப்போது வி.பி.என். உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினர். இதனால், அரசின் நடவடிக்கை கேலிக்குரியதாகிவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்திலேயே அரசால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. எனவே, அதனாலும் நாங்கள் பாதிக்கப்படவில்லை” என்றார்.
தமிழர்கள் பகுதிகளில் நெருக்கடி இல்லை என்றால் ஏன் குழந்தை, குட்டிகளுடன் ஆபத்தான ஒரு கடல் பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு தனுஷ்கோடிக்கு வருகிறார்கள்?
“அப்படி செல்பவர்கள் அனைவரும் போராட்ட காலங்களில் இங்கிருந்து தமிழகம் சென்று சமீப வருடங்களில் திரும்பியவர்கள். அவர்களால் இங்கே தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. இங்கிருக்கும் நிலையைவிட அகதியாக இருந்தாலும் தமிழகத்தில் பிரச்சினை குறைவு என்று கருதுவதாலும் தமிழகத்தில் தொடர்புகள் இருப்பதாலும் மீண்டும் வெளியேறுகிறார்கள்” என்றார்.
ஆனால், தமிழர்கள் பகுதிகளிலும் ‘Go home Gota’ போராட்டம் நடக்கிறதே?
“இந்தப் போராட்டமும் சிங்களர்களின் போராட்டமும் ஒன்றல்ல. ‘Go home Gota’ என்று இன்று நேற்றல்ல கடந்த சில வருடங்களாகவே போராடி வருகிறோம்.
தமிழர்களின் நிலங்களிலும் மீன் பிடி பகுதிகளிலும் ராணுவ ஆக்கிரமிப்பு இப்போதும் தொடர்கிறது. எனவே, அதற்கு எதிராக ஒவ்வொரு ஊரிலும் ராணுவத்தை வெளியேறச் சொல்லிப் போராடி வருகிறோம். மேலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் என பல்வேறு விவகாரங்களுக்காகப் போராடி வருகிறோம்.
‘Go home Gota’ என்னும் எங்களின், தமிழர்களின் கோஷத்தை, அவர் ஆட்சிக்கு வரக் காரணமான சிங்கள பவுத்த தேசியவாதிகளும் இன்று சொல்கிறார்கள் என்பதுதான் விசேஷம். இது எங்கள் போராட்டக்காரர்களுக்கு வலிமையைத்தான் தந்துள்ளது” என்றார், ஆத்மன்.