No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் சொத்து வரி உயர்வு

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் சொத்து வரி உயர்வு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம்  சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம்   சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது.

மாநகராட்சிகளில் 600  சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 600-1,200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,201-1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதமும் உயர்த்தப்பட உள்ளது.  சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1.200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

சொத்து வரி உயர்வு – எடப்படி கமெண்ட்

சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையை தராமல் கைவிரித்த இந்த   அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது, இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு, போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.  அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில்    அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து  ஜனாதிபதி கோத்தபய  ராஜபக்‌ஷே  உத்தரவிட்டுள்ளார்.  

அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு  மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, பின்னர் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.  இதற்கு அண்ணாமலை ஆட்சேபம் தெரிவித்திருந்தார் இந்நிலையில்  பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி  அண்ணாமலைக்கு 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 11 பேர் கொண்ட  சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் மாநில போலீஸார்  24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். 

சென்னையில் டீ, காபி  விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி டீயின் விலை  ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பார்சல் டீ மற்றும் காபியின் விலையும் உயத்தப்ப்ட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...