ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார். இந்நிலையில், தனது டெல்லி பயணத்தின் 3-வது நாளான இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அமலுக்கு வந்தது சுங்கக் கட்டண உயர்வு: கோபத்தில் டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 55 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச் சாவடிகளைக் கடந்த வாகன ஓட்டிகள் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர். நல்லூர் சுங்கச்சாவடியில் 40 சதவிகிதம் அளவுக்கு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியுடன் கூறினர். செங்கல்பட்டு பரணுர் டோல்கேட்டில் அதிக கட்டணம் காரணமாக கோபமடைந்த பெண் ஒருவர் டோல்கேட் ஊழியரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. மேலும், பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வெயில் குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
நடப்பாண்டில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது 101 டிகிரியையும் தாண்டி உள்ளது. இதனால், அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் இம்மாதம் (ஏப்ரல்) தமிழ்நாடு உள்ளிட்ட தென் தீபகற்ப பகுதியில் இயல்பை விட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.