No menu items!

சிஎஸ்கேவின் கதை – 4: எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஒரு வெற்றி

சிஎஸ்கேவின் கதை – 4: எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஒரு வெற்றி

தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாட்களில் ஒன்று ஏப்ரல் 19. கடந்த 2008-ம் ஆண்டில் இந்த நாளில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ், தனது முதலாவது ஐபிஎல் போட்டியை சந்தித்தது. போட்டியின் ஒரு பக்கம் இருந்தது ‘தல’ தோனியின் படை என்றால், எதிர்ப்பக்கம் இருந்தது அப்போதைய ‘தளபதி’ யுவராஜ் சிங்கின் ‘பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்’ அணி. இப்படி ‘தல’யும் ‘தளபதி’யும் மோதிக்கொண்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஆட்டத்திலேயே அனல் பறந்தது.

‘மிஸ்டர் கிரிக்கெட்’ என அக்காலத்தில் வர்ணிக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி, இப்போட்டியில் சென்னையின் சிங்கப் பாய்ச்சலைக் காட்டினார். வெறும் 54 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் அவர் 116 ரன்களைக் குவிக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 240 ரன்களை எடுத்தது சென்னை. மறுபுறத்தில் பஞ்சாப் அணி 207 ரன்களை மட்டுமே எடுக்க, முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்தது சென்னை. முதல் போட்டியில் இருந்த இந்த ரன் குவிக்கும் வேகம் அடுத்தடுத்த போட்டியிலும் சென்னை அணிக்கு கை கொடுத்தது.

ஹஸ்ஸி, தோனி, மேத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் தாக்குதலை முன்னெடுக்க, அதிக ரன்களைக் குவிக்கும் அணியென பெயர் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் அணியின் வெற்றிக்கு பேட்டிங்குடன் நல்ல பந்துவீச்சும் வேண்டுமே.. அந்த விஷயத்தில் ஆரம்பம் முதல் இன்றுவரை சொதப்புவது சென்னைக்கு வழக்கம். முதல் தொடரில் முரளிதரனைத் தவிர நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாதது சென்னையின் பயணத்தை சற்று பாதித்தது.

இறுதிப் போட்டிவரை முன்னேறிய சென்னை அணி, ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல முடியாததால் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்து சறுக்கியது.

முதல் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸால், 2009-ம் ஆண்டில் நடந்த 2-வது ஐபிஎல் தொடரில் அரை இறுதி வரை மட்டுமே முன்னேற முடிந்தது. முதல் 2 முறையும் கோப்பையை வெல்லாத மற்ற பல அணிகளின் நிர்வாகங்களும், தங்கள் அணிக்குள் பல மாற்றங்களைச் செய்தன. ஒருசில அணிகள் கேப்டன்கள் மற்றும் முக்கிய வீரர்களின் தலையை உருட்டின. ஆனால் சென்னை அணியின் நிர்வாகம் எதையும் செய்யவில்லை.

அணியின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாகக் காத்திருந்தது. தாங்கள் விதைத்தது நிச்சயம் முளைக்கும் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

பழைய எம்.ஜி.ஆர் படங்களின் சண்டைக் காட்சிகளில் ஒரு விஷயத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன்கள் எம்.ஜி.ஆரை முதல் அடி அடிப்பார்கள். அவரும் அடிவாங்கி ரத்தத்தை துடைத்துக்கொள்வார். இரண்டாவது முறையும் எதிராளியின் அடியை அவர் வாங்கிக்கொள்வார். ஆனால் மூன்றாவது முறை சும்மா இருக்க மாட்டார். எதிராளியின் கையைத் தடுத்து முறுக்கி, மறுகையால் ஓங்கி ஒரு குத்து விடுவார்… எதிராளிகள் சுருண்டுவிடுவார்கள். சிஎஸ்கே விஷயத்திலும் அதுதான் நடந்தது. முதல் இரண்டு தொடர்களில் எதிராளிகளிடம் அடிவாங்கிச் சுணங்கிய சிஎஸ்கே, 3-வது முறை தடுத்துத் தாக்கியது. எதிராளிகள் சிதறினர்.

இறுதிப் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை. இந்த முதல் வெற்றியின் ருசியை கூட்டும் விதமாக அதே ஆண்டு நடந்த உலக அளவிலான சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வாகை சூடியது.

இப்படி ஒரே ஆண்டில் கிடைத்த இரட்டை வெற்றியால் சென்னையின் மதிப்பு உயர்ந்தது. சென்னை அணியைப் போலவே கேப்டன் தோனியின் மதிப்பும் கூடிக்கொண்டே இருந்தது. 2011-ம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற அது உச்சத்தை தொட்டது.

2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடக்கூட நேரம் இல்லாமல் அடுத்த ஐபிஎல் போட்டியை சந்திக்க சென்னைக்கு பறந்து வந்தார் மகேந்திரசிங் தோனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...