தமிழக முதல்வர் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி சென்ற முதல்வர் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுகவின் அலுவலகத்தில் சோனியா காந்தியை முதல்வர் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் உடனிருந்தார்கள்.
இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
பிரதருடனான சந்திப்பின்போது தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் நிதியை ஒதுக்குவது குறித்து முதல்வர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் “சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கு சரியான, நியாயமான காரணங்களை மாநில அரசுகள் கூற வேண்டும். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு : காங்கிரஸ் போராட்டம்
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று நாடுதழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டங்கள் ஏப்ரல் 7-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில் மின்வெட்டு 10 மணி நேரமாக நீட்டிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு நாடு முழுவதும் மின் வெட்டு நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளது. இம்மாத தொடக்கம் முதலே இலங்கையில் 7 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருந்தது.