மேகா ஆகாஷின் அடுத்தப் படம்
‘இன்ஃபினிடி பிலிம் வெஞ்சர்ஸ்’ தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டது. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜயகாந்த்தும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரமாகவோ அல்லது சாபமாகவோ நினைப்பார்கள். இங்கு கதாநாயகனுக்கு மழை பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இப்படத்தின் பெரும்பகுதியை தியூ – தாமன் பகுதியில் படக்குழுவினர் எடுத்துள்ளனர், சிறு சிறு பகுதிகள் தவிர படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, 2022 கோடையில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கலில் 500 படங்கள்
‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஜாகுவார் தங்கம், இயக்குநர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்கழ்ச்சியில் பேசிய ஆர்.கே.சுரேஷ், “த்மிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள். இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமௌலி. இப்படத்தை பார்த்து விட்டு ராஜமௌலி பாராட்டியிருக்கிறார்” என்றார்.
இயக்குநர் ராஜேஷ் பேசும்போது, “மாயன் படம் என்பதை விட நிகழ்வு என்றுதான் கூறுவேன். ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தை எடுத்தோம். பின்னால் வரும் சந்ததிகளுக்கு இப்படம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்” என்றார்.
இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது, “பாகுபலி போன்று தமிழ் படமும் பிரமாண்டத்தை சுமந்து பிற மொழிகளுக்கு செல்ல வேண்டும். இப்படத்தை பார்த்தப் பிறகு அந்த நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் அனைவரும் நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார்கள்” என்றார். இறுதியாக, இப்படத்தின் இசைத் தட்டு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.
திரைத் துறையினரின் மருத்துவ ஆர்வம்
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு 13-ம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இரண்டு கிலோமீட்டர் தூர நடை பயணத்தை இயக்குநர் பாக்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகைகள் சாக்ஷி அகர்வால், சாயாசிங் மற்றும் மேத்தா மருத்துவமனையை சார்ந்த மருத்துவர் கலைவாணி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்ற நடைப்பயணத்தில், சிறுநீரக கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
டாக்டர் கலைவாணி கணேசன், பேசும்போது, “சிறுநீரக நோய் அறிகுறி மற்றும் நோய் மேலாண்மை, “சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் – டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களும் மருத்துவ மற்றும் சிறுநீரக பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என்றார்.