இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டை பாஜக மயமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் பெரிய அளவில் விரும்பும் சினிமாத் துறைக்குள் தங்கள் மூக்கை நுழைத்தது. பாஜகவின் கொள்கைகளைப் புகுத்தும் விதமாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’கேரளா ஸ்டோரி’, ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘சாம்ராட் பிருத்விராஜ்’ போன்ற படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டன. சினிமாவுக்கு அடுத்த்தாக இந்திய மக்கள் அதிகம் நேசிக்கும் கிரிக்கெட்டையும் இப்போது கையில் எடுத்திருக்கிறது.
முதல் கட்டமாக டெல்லியில் உள்ள ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானம் ‘அருண் ஜேட்லி ஸ்டேடியம்’ என மாற்றப்பட்டது. அகமதாபாத்தில் இருந்த சர்தார் படேல் ஸ்டேடியம், நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று மாற்றப்பட்டது. அன்றுமுதல் அந்த ஸ்டேடியத்தில் முக்கிய போட்டிகள் நடக்கும்போதெல்லாம், அதைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி வருவதும், அப்போது பாஜக தொண்டர்களை வைத்து அவருக்கு வாழ்க கோஷம் போடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
மைதானத்தில் மட்டுமல்ல, கிரிக்கெட் வாரியத்தையும் பாஜக கையில் எடுத்திருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் கைப்பற்றினார். மேற்கு வங்கத்தில் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் முதலில் பிசிசிஐ தலைவர் பதவியை சவுரவ் கங்குலிக்கு வழங்கினார்கள்.
ஆனால் ரஜினி ஸ்டைலில் அவர் அரசியலுக்கு நோ சொல்ல, அந்த பதவியை அவரிடம் இருந்து பறித்தார்கள். பின்னர் தங்களுக்கு கைப்பாவையாக செயல்படும் ஒருவர் வேண்டும் என்பதற்காக, பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத ரோஜர் பின்னியை பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி பாஜக எம்பியாக இருந்தவர். சில மாதங்களுக்கு முந்தான் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அவர் அரசியலில் இருந்து விலகினார். இந்த சூழ்ழலில் அவருக்கு பயிற்சியாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு, அந்த அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த காரணத்தால், காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக பிசிசிஐ சொல்கிறது. அனால் அதே நேரத்தில் ஐபிஎல் கோப்பையில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியின் ஒரு சாதாரண வீரராககூட காண்டிராக்ட் அளிக்கப்படாதது ஏன் என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை.
கடந்த ஆண்டில் நடந்த ஒருநாள் கோப்பைக்கான உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் திடீரென நுழைந்த பிரதாமர் மோடி, வீர்ர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஸ்ரேயஸ் ஐயர் அவரை அவமதித்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இப்படி தங்களுக்கு தேவையானவர்களை மட்டும் அணியில் சேர்ப்பதில் பாஜக கவனமாக இருக்கிறது.
ஜெய்ஷா, காம்பீர் கூட்டணியில் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இதேபோன்ற பாரபட்சம் தொடர்ந்தால், இந்திய கிரிக்கெட் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணி ஒரு காலத்தில் இந்தியாவைப் போலவே வலிமையான அணியாக இருந்தது. ஆனால் அந்நாட்டு கிரிக்கெட்டில் அரசியல் கலந்த பிறகு, பாகிஸ்தான் அணியால் தொடர்ந்து போட்டிகளில் ஜெயிக்க முடியவில்லை. இப்போது இந்திய கிரிக்கெட்டிலும் அரசியல் நுழைந்துள்ளது அதை கடுமையாக பாதிக்குமோ என்பது கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.