No menu items!

ஆம்ஸ்ட்ராங் போலவே நடந்த ஏழுமலை நாயக்கர் கொலை – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

ஆம்ஸ்ட்ராங் போலவே நடந்த ஏழுமலை நாயக்கர் கொலை – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை போலவே 30 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையை உலுக்கிய ஒரு கொலை சார்பட்டா ராயபுரம் ஏழுமலை நாயக்கர் படுகொலை. ஏழுமலை நாயக்கர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்?

இது பற்றி வழக்கறிஞரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் நினைவுகள் இங்கே…

“1993 அக்டோபர் 2&3… திமுக தலைவர் கலைஞர் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அவர்களிடம் பேசும்போது கலைஞர், “மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கை இன்றைய மாநில அரசு மூலம் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பாருங்கள் ‘ என அந்தச் சுற்றறிக்கையை ஊடகங்களுக்குக் காட்டுகிறார்!

‘வை கோபால்சாமியின் ஆதாயத்திற்காக கலைஞரின் உயிரைப் பறிக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள் ‘ என்பதாகக் குறிப்பிட்டு அந்தச் சுற்றறிக்கை என் கைக்கு வந்துள்ளது என்று கூறுகிறார். அப்போது ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.

பத்திரிக்கையாளிடம் மேலே கண்ட வகையில் கலைஞர் பேசிய பின் கூட்டம் முடிந்துவிட்டது. முடிந்தவுடன் உடனே பிடிஐயில் இருந்த ராமசாமி உடனே என்னைத் தொலைபேசியில் அழைத்து, “பத்திரிகையாளர் கூட்டத்தில் கலைஞர் இவ்வாறு மத்திய அரசு சுற்றறிக்கையைக் காட்டிப் பேசியிருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? வைகோ எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்.

அதிர்ச்சியான அந்த செய்தியைக் கேட்டவுடன் நான் வைகோவிற்கு போன் செய்தேன். Y block-அண்ணாநகர் 6214252 என்ற அந்த எண் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. “இது மாதிரி கலைஞர் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து பத்திரிகையாளர்களிடம் உங்களைப் பற்றிப் பேசி உள்ளார். அதை PTI ராமசாமி எனக்குக் கன்வே செய்தார்” என்றும் சொன்னேன்.

அப்போது வைகோ காரைக்குடியிலோ ராமநாதபுரத்திலோ ஒரு திருமண விழாவில் கலந்துவிட்டு திரும்ப இருக்கையில், அங்கு அவர் தங்கி இருந்து விடுதியின் வாஷ்பேஷன் தவறி உடைந்து வைகோவின் கால் மீது விழுந்து, காயம் ஆகிவிட்டது. காலில் கட்டுப்போட்டுச் சிகிச்சையில் இருந்தார் வைகோ!

அவர் தொலைபேசியில், “உடனே இங்கே புறப்பட்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார். நானும் புறப்பட்டு அங்கு சென்றேன். நான் பத்திரிகையாளர் பகவான் சிங் போன்ற சிலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடமே பேச வைத்து கலைஞர் சொன்னதை உறுதி செய்தேன்.

இது குறித்து தொலைபேசியில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் வைகோ பேசினார். பொன் முத்துராமலிங்கத்திடமும் தொடர்ந்து பிறகு கண்ணப்பனிடமும் பேசினார். அதற்குப் பிறகுதான் கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றோர்கள் எல்லோரும் கூடிச் சந்தித்து இந்த சுற்றறிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது மிக அவசரமாக திமுகவை விட்டு வைகோ நீக்கப்பட்டார்.

அதன் தொடர் விளைவாக, ‘வைகோவிற்கு அநீதி நடந்துவிட்டது; கலைஞர் தன் குடும்ப அரசியலுக்காக வைகோவை வெளியேற்றி அவமானப்படுத்தி விட்டார்’ என்று பெரும் பரபரப்பாகி அதை எதிர்த்து நீதி கேட்டு அன்று தமிழ்நாட்டில் நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது. 30 திமுக மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.

குமரி மாவட்ட திமுக செயலாளர் ரத்தினராஜ், நெல்லை மாவட்ட செயலாளர் டிஎகே லக்குமணன், தேனியை உள்ளடக்கிய மதுரை மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம், திருச்சி மாவட்டச் செயலாளர் செல்வராஜ், கீழ் தஞ்சை மாவட்டச் செயலாளர் வேதாரண்யம் மீனாட்சி சுந்தரம், ஒன்றுபட்ட தென்னர்காடு மாவட்டச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், திருப்பூர் உள்ளடங்கிய அன்றைய கோவை மாவட்டச் செயலாளர் கண்ணப்பன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி உட்பட அனைவரும் வைகோவுக்கு ஆதரவாகத் திமுகவிலிருந்து விலகி வந்தார்கள்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம் முதல் மூன்று நாள் வைகோவுக்கு ஆதரவாக இருந்துவிட்டு மீண்டும் திமுகவிற்குத் திரும்பிக் கலைஞரைச் சந்திக்கப் போய்விட்டார்.

இப்படித்தான் திமுகவை விட்டுப் பிரிந்து தனித்து வைகோ தலைமையில்  மதிமுக உருவானது. தினகரன் கேபிகே, மதுராந்தகம் ஆறுமுகம் பிறகு மதிமுகவிற்குள் வந்தார்கள்.

அன்றைய திமுகவின் இரண்டு எம்எல்ஏகளில் பரிதி இளவழுதி திமுகவில் இருந்துவிட்டார். துறைமுகம் அ. செல்வராசன் எம்எல்ஏ, வைகோ உடன் வந்து சேர்ந்தார்.

துறைமுகம் அ. செல்வராஜுடன் எப்போதும் உடன் இருந்தவர்தான் அன்றைக்கு கொலையுண்டு போன ராயபுரம் ஏழுமலை. அவர் மதிமுகவிற்குள் வந்தவுடன் சென்னை மாவட்டத்தின் செயலாளராக ஆனார்.

மூன்று நாட்கள் நாங்கள் மதிமுக கட்சியை எப்படிச் சீரமைப்பது என்று திருவேற்காடு கோவிந்தசாமி வீட்டில் வைத்து இரவு பகல் பாராது அதற்கான திட்டங்களை, கொள்கையை வகுப்பதில் ஈடுபட்டோம். யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு, என்னன்ன வேலைகளை யார் செய்வது என்ற வகையில் கட்சியின் உள்கட்டமைப்பைச் செம்மையாக உருவாக்குவது என்று கலந்து பேசி விவாதித்தோம்.

அதன் தொடர்ச்சியில் அடுத்த கட்டத் தலைவராக வரவேண்டிய வைகோவைத் திமுகவை விட்டு நீக்கியதற்கான நீதி கேட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பகல் பாராது விடிய விடிய பல கூட்டங்களை நடத்தினோம். சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் இருந்து நீதி கேட்பு பேரணியாகத் தொடங்கி, பழைய அடையாறு கேட் ஹோட்டல் வழியாக ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை, கடற்கரைச் சாலை வழியாக, சீரணி அரங்கில் மக்கள் திரள் கூட்டம் நடந்தது. ஏறக்குறைய பதினெட்டு மணி நேரம் மக்கள் ஊர்வலம் மெல்ல நடந்து நகர்ந்து சீரணிக் கடற்கரையை அடைந்தது. அந்தக் கடற்கரை அரங்கத்திற்கு தொடர்ந்த இந்த ஊர்வலத்தின் கடைசி வண்டி வந்து சேரும்போது காலை 5 மணி.

அவ்வளவு சிறப்பாக நடந்த ஒரு பிரம்மாண்டமான பேரணி அது.

அப்படியான மிகச் சிறந்த ஒரு பேரணியை 1994 ஏப்ரல் 16 அன்ற நடத்த என்னுடன் கடுமையான பணிகள் செய்து அரும்பாடுபட்ட ராயபுரம் ஏழுமலை யாரும் எதிர்பாராத விதத்தில் 17 ஏப்ரல் 1994 இரவில் கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையில் பேரணியை முடித்துவிட்டு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததால் வைகோ டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அவசரமாகக் கிளம்பி போயிருந்தார்.

துறைமுகம் அ. செல்வராஜூதான் பதற்றுத்துடன் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, “வழக்கறிஞரே! நம்ம தம்பி ஏழுமலையை கொன்னுட்டாங்கய்யா!“ என்று கதறி அழுதவாறே, “நீங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

எனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோக்காரரை வரவழைத்து ஆர். செல்வராஜ்  வீட்டிற்கு கிளம்பி சென்றேன். அவரையும் கையோடு அழைத்துக்கொண்டு ஆட்டோவில் இருவரும் கிளம்பி ராயபுரம் பாலத்தின் அருகில் வட கிழக்கு புறத்தில் போய்ப் பார்த்த போது அங்கே ஏழுமலையின் உடல் வெட்டிக் கூறாக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் யாரும் அப்போது அங்கு வரவில்லை. சரியாகச் சொன்னால் அவர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக தான் அங்கு வந்து சேர்ந்தார்கள். நானும் அ. செல்வராஜை சார்ந்த நான்கு ஐந்து பேரும் மட்டும் தான் சம்பவ இடத்தில் விடிய விடிய இருந்தோம். காவல்துறையிடம் உடலை ஒப்படைத்து விட்டுத் திரும்பி ராயபுரம் பாலத்திற்கு மேற்கு புறத்தில் ஒரு மாடியில் இருந்த ஏழுமலையின் அலுவலகத்திற்கு சென்று மிகுந்த மனச் சோர்வுடன் அமர்ந்தோம்.

வைகோவிற்கு போன் செய்தேன். விஷயத்தைச் சொன்ன போது அவரால் அதைத் தாள முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் அழுகை தொலைபேசியிலேயே துக்கித்தது. அன்றைய வைகோ அப்படித்தான் இருந்தார்! “துறைமுகம் அ. செல்வராஜ் கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதையெல்லாம் அவரால் தாங்க இயலாது, வயதானவர்” என்றும் சொன்னார்.

அந்த நள்ளிரவில் நாங்கள் வட சென்னை போய் இரவு முழுக்க, ஏழுமலையின் உடல் தனி தனியாக இருந்ததை பார்க்க, எதையும் புரியாமல், கண்ணீரும் பீதியோடும் அதன் முன்பு காத்திருந்தோம். ஏழுமலையின் உடலை அரசு மருத்துவமனையில் வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்து முடிக்க மறுநாள் பிற்பகல் ஆகிவிட்டது.

இதனிடையே, அந்த நள்ளிரவு நேரத்தில் ஏழுமலையின் அலுவலகத்தில் இருந்தபடியே பொன் முத்துராமலிங்கம் உட்பட பல செயலாளர்கள் அனைவருக்கும் கால் செய்து நடந்ததை சொன்னேன். மறுநாள் மிகுந்த சிரமப்பட்டு வெளியூரில் இருந்து அனைவரும் வந்து சேர பகல் 11 மணி ஆகிவிட்டது. வைகோவும் விமானத்தைப் பிடித்து டில்லிருந்து சரியாகப் பத்து மணியளவில் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்.

அந்த நாளும் அந்த சூழ்நிலையும் இன்று நினைத்தால் கூட என் மனதில் வலி மிகுந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. செயல்வீரர், மக்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர், களப்பணியாளர்…. தன்னை மறந்து மதிமுகவில் செயல்பட்டவர் ஏழுமலை!!

அவர் கொலையுண்டு போனதற்கு அவர் மீதான தனிப்பட்ட விரோதம்தான் என்று காரணம் சொன்னார்கள்!! எதையும் காரணங்களாகவோ யாரையும் குறிப்பிட்டோ சொல்ல என்னால் முடியவில்லை! உண்மையில் ஏழுமலையின் மரணத்திற்கு இதுவரை யார் காரணம், அதற்கான நோக்கம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது தான் வேதனை.

இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கும் தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மை ஒரு எட்டு வைப்பதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும்!!! வேறு என்ன சொல்ல இருக்கிறது?

வண்ணாரப்பேட்டை சுழல் மெத்தை மீட்டிங்கையும் மெரினா பேரணியையும் அவ்வளவு கலர்ஃபுல்லாக, மாநாடு போல் நடத்திக் காட்டியவர் ஏழுமலை. அவ்வளவு சர்வ பலம் வாய்ந்த ஏழுமலை நாயக்கரை சென்னை பேரணி முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவர் ஏரியாவுக்குள்ளேயே புகுந்து கண்டம் துண்டமாகப் வெட்டி போட்டார்கள்!

வேனில் வந்திறங்கிய அவருக்குப் பரிச்சயமான ஒரு கூட்டம், வெற்றிகரமாக பேரணி & கூட்டத்தை நடத்தியதற்காக மாலையும் பொன்னாடையும் போர்த்துவதாக செய்துவிட்டிருக்கிறார்கள்.

‘’எப்படியா? அவரு யாருன்னு நினச்ச? பாக்ஸர் மச்சி. ஏழைகளுக்கு வள்ளல். பெட் ஃபைட் நிறைய பண்ணிருக்காரு. பொருளால போட்டா துண்ட வச்சி எப்படி தடுக்கறதுன்னு வித்த தெரிஞ்சவர்டா. நம்ப வச்சி கழுத்தறுத்தானுக.! ஆனா ஒண்ணு மச்சி, நாயக்கர போட்டவங்கள போடாம வுட மாட்டேன்னு சிவா அண்ணன் சமாதில வச்சு சத்தியம் செஞ்சிருக்காரு, மவனே சிதைக்காம விட மாட்டாரு.”

சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி மாமூல் மேட்டரில் நாயக்கர் மாமூல் தொகையை உயர்த்திக் கேட்கவே, அவருடைய போட்டியாளரை வைத்துப் போடுவது போல் பழி தீர்த்துக்கொண்டார்கள் எனவும் சிலர் பேசி கொண்டனர்.

அப்புறம் பார்த்தா நாயக்கர் இடத்தை சிவாதான் கைப்பற்றினார்.

தூத்துக்குடி கேவிகே சாமியின் முடிவும் 60 ஆண்டுகளுக்கு இப்படித்தான் முன் நடந்தது. கடந்த 1996க்கு பின் மதிமுக நிர்வாகி வட சென்னை சிவாவும் ஏழு மலை போலவே நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்” என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...